திருவாய்மொழி 7-10 இன்பம் பயக்க
7-10. இன்பம் பயக்க
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் ஆள்கின்றான்" — திருமகளுடன் இருந்து ஏழுலகையும் இனிதே ஆள்பவனைச் சொல்லும் பதிகம். ஆட்சி என்பது இங்கே இன்பம் தருவதாகவே வரையறுக்கப்படுகிறது. ஏழாம் பத்து இந்த மகிழ்ச்சியான ஆட்சிக் காட்சியுடன் நிறைவடைகிறது.
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திருவாறன்விளை அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ?
ஆகுங்கொல்? ஐயம் ஒன்றின்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்துறையும் மாகம் திகழ் கொடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை மாகந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கைதொழக் கூடுங்கொலோ?
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை ஆடும் பறவை மிசைக் கண்டு கைதொழுதன்றி அவன் உறையும் பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறங்கம் பன்னினர் வாழ் நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்குங்கொல்? நிச்சலுமே
வாய்க்குங்கொல்? நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே
மலரடிப் போதுகள் என்னெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பலரடியார் முன்பருளிய பாம்பணையப்பன் அமர்ந்துறையும் மலரின் மணி நெடூுமாடங்கள் நீடு மதில் திருவாறன்விளை உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்! அன்றங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந்தோள் புணர்ந்தான் என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள்நகரமதுவே
நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திருவாறன்விளை நீணகரத்துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன் வாண்புரம் புக்கு முக்கட்பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து வாணனை ஆயிரந்தோள் துணித்தான் சரணன்றி மற்றொன்றிலமே
அன்றி மற்றொன்றிலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின்வாய் நின்று தன் நீள்கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் சென்றங்கு இனிது உறைகின்ற செழும்பொழில் சூழ் திருவாறன்விளை ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே
தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளிவீசும்பு ஏறலுற்றால் நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை மேவி வலம் செய்து கைதொழக் கூடுங்கொல்? என்னும் என் சிந்தனையே
சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை தேவபிரான் அறியும் சிந்தையினால் செய்வதானறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றோர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனனாகிச் செழுங்குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே