Skip to the text
திருவாய்மொழி

7-8. மாயா வாமனனே

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"மாயா! வாமனனே! மதுசூதா! நீ அருளாய்" — திருவல்லவாழ் என்னும் தலத்தை நோக்கி அருள் வேண்டும் பதிகம். தீயும் நீரும் நிலனும் விசும்பும் காற்றுமாய் இருப்பவனை நினைவுகூர்ந்து, அத்தனை பரவலான ஒருவனிடம் ஒரு தனிப்பட்ட வேண்டுதலை வைக்கிறார். பேரண்டமும் தனி மனிதனும் ஒரே பாசுரத்தில் சந்திக்கின்றனர்.

திருவாய்மொழி 7-8 மாயா வாமனனே

3414

மாயா! வாமனனே! மதுசூதா! நீ அருளாய்‌ தீயாய்‌ நீராய்‌ நிலனாய்‌ விசும்பாய்க்‌ காலாய்‌ தாயாய்‌ தந்தையாய்‌ மக்களாய்‌ மற்றுமாய்‌ முற்றுமாய்‌ நீயாய்‌ நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!

3415

அங்கண்‌ மலர்த்‌ தண்துழாய்‌ முடி அச்சுதனே! அருளாய்‌ திங்களும்‌ ஞாயிறுமாய்ச்‌ செழும்பல்‌ சுடராய்‌ இருளாய்‌ பொங்கு பொழி மழையாய்ப்‌ புகழாய்ப்‌ பழியாய்ப்‌ பின்னும்‌ நீ வெங்கண்‌ வெங்கூற்றமுமாய்‌ இவை என்ன விசித்திரமே!

3416

சித்திரத்தேர்‌ வலவா! திருச்சக்கரத்தாய்‌! அருளாய்‌ எத்தனையோருகமும்‌ அவையாய்‌ அவற்றுள்‌ இயலும்‌ ஒத்த ஒண்பல்‌ பொருள்கள்‌ உலப்பில்லனவாய்‌ வியவாய்‌ வித்தகத்தாய்‌ நிற்றி நீ இவை என்ன விடமங்களே!

3417

கள்ளவிழ்‌ தாமரைக்கண்‌ கண்ணனே! எனக்கொன்று அருளாய்‌ உள்ளதும்‌ இல்லதுமாய்‌ உலப்பில்லனவாய்‌ வியவாய்‌ வெள்ளத்‌ தடங்கடலுள்‌ விடநாகணை மேல்‌ மருவி உள்ளப்‌ பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!

3418

பாசங்கள்‌ நீக்கி என்னை உனக்கே அறக்‌ கொண்டுட்டு நீ வாச மலர்த்‌ தண்துழாய்‌ முடி மாயவனே! அருளாய்‌ காயமும்‌ சீவனுமாய்க்‌ கழிவாய்ப்‌ பிறப்பாய்ப்‌ பின்னும்‌ நீ மாயங்கள்‌ செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே!

3419

மயக்கா! வாமனனே! மதியாம்‌ வண்ணம்‌ ஒன்று அருளாய்‌ அயர்ப்பாய்த்‌ தேற்றமுமாய்‌ அழலாய்க்‌ குளிராய்‌ வியவாய்‌ வியப்பாய்‌ வென்றிகளாய்‌ வினையாய்ப்‌ பயனாய்ப்‌ பின்னும்‌ நீ துயக்காய்‌ நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே!

3420

துயரங்கள்‌ செய்யும்‌ கண்ணா! சுடர்‌ நீள்முடியாய்‌! அருளாய்‌ துயரம்‌ செய்‌ மானங்களாய்‌ மதனாகி உகவைகளாய்‌ துயரம்‌ செய்‌ காமங்களாய்த்‌ துலையாய்‌ நிலையாய்‌ நடையாய்‌ துயரங்கள்‌ செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே!

3421

என்ன சுண்டாயங்களால்‌ நின்றிட்டாய்‌? என்னை ஆளும்‌ கண்ணா! இஇன்னதோர்‌ தன்மையை என்று உன்னை யாவர்க்கும்‌ தேற்றரியை முன்னிய மூவுலகும்‌ அவையாய்‌ அவற்றைப்‌ படைத்து வெங்கூற்றமுமாம்‌ ' வித்தகத்தால்‌ 7? துயக்கா ? என்ன சுண்டாயங்களால்‌ எங்ஙனே நின்றிட்டாய்‌ என்‌ கண்ணா பின்னும்‌ உள்ளாய்‌! புறத்தாய்‌! இவை என்ன இயற்கைகளே!

3422

என்ன இயற்கைகளால்‌ எங்ஙனே நின்றிட்டாய்‌? என்‌ கண்ணா! துன்னு கரசரணம்‌ முதலாக எல்லா உறுப்பும்‌ உன்னு சுவையொளி ஊறொலி நாற்றம்‌ முற்றும்‌ நீயே உன்னை உணர உறில்‌ உலப்பில்லை நுணுக்கங்களே

3423

இல்லை நுணுக்கங்களே இதனில்‌ பிறிதென்னும்‌ வண்ணம்‌ தொல்லை நன்னூலில்‌ சொன்ன உருவும்‌ அருவும்‌ நீயே அல்லித்‌ துழாய்‌ அலங்கல்‌ அணிமார்ப! என்‌ அச்சுதனே! வல்லதோர்‌ வண்ணம்‌ சொன்னால்‌ அதுவே உனக்காம்‌ வண்ணமே

3424

ஆம்வண்ணம்‌ இன்னதொன்றென்று அறிவதரிய அரியை ஆம்வண்ணத்தால்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ அறிந்துரைத்த ஆம்வண்ண ஒண்தமிழ்கள்‌ இவை ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌ ஆம்வண்ணத்தால்‌ உரைப்பார்‌ அமைந்தார்‌ தமக்கு என்றைக்குமே