திருவாய்மொழி 7-2 கங்குலும் பகலும்
7-2. கங்குலும் பகலும்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்; கண்ண நீர் கைகளால் இறைக்கும்" — இரவும் பகலும் உறக்கமின்றி, கைகளால் கண்ணீரை அள்ளி இறைக்கும் மகளின் நிலையை தாய் சொல்லும் பதிகம். கண்ணீரை அள்ளி இறைக்கும் அந்த ஒற்றைப் படிமம் அளவுக்கு மீறிய துயரைச் சொல்லிவிடுகிறது. நம்மாழ்வாரின் மிக நுட்பமான படிமங்களுள் ஒன்று இது.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும் சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டூ? என்னும் இருநிலம் கைதுழா இருக்கும் செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்கின்றாயே?
என் செய்கின்றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும் என் செய்கேன்? எறிநீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும் முன் செய்த வினையே! முகப்படாய் என்னும் முகில் வண்ணா! தகுவதோ?! என்னும் முன் செய்து இவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?
வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும் உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே! என்னும் உள் உருகும் கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும் திட்கொடு மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்திட்டாயே? 3 இது கோவில் திருவாய்மொழி
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா! கடியை காண் என்னும் வட்டவாய் நேமி வலங்கையா! என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும் சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் சிந்தித்தாயே?
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய்! என்னும் வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும் அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே! அலைகடல் கடைந்த ஆரமுதே சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும் மா மாயனே! என்னும் செய்ய வாய் மணியே! என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும் வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்! என்னும் பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய் பாவியேன் செய்யற்பாலதுவே
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே! கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட கடல் வண்ணா! கண்ணணே! என்னும் ர சேல்கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும் கோலமா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே
கொழுந்து வானவர்கட்கு! என்னும் குன்றேந்திக் கோறநிரை காத்தவன்! என்னும் அழும் தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும் எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும் செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே?
என் திருமகள் சேர் மார்வனே! என்னும் என்னுடை ஆவியே! என்னும் நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும் அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே! என்னும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
முடிவு இவள் தனக்கு ஒன்றறிகிலேன் என்னும் மூவுலகாளியே! என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே! என்னும் நான்முகக் கடவுளே! என்னும் வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண்திருவரங்கனே! என்னும் அடு அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருனல் துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண்பொழில் சூழ் வண்குருகூர்ச் சடகோபன் முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே