Skip to the text
திருவாய்மொழி

6-9. நீராய்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"நீராய், நிலனாய், தீயாய், காலாய், நெடுவானாய், சீரார் சுடர்கள் இரண்டாய்" — நீரும் நிலமும் தீயும் காற்றும் வானும், ஞாயிறும் திங்களுமாய் இருப்பவனைச் சொல்லும் பதிகம். பஞ்சபூதங்களையும் ஒளிகளையும் ஒவ்வொன்றாக அடுக்கி, எதுவும் விடுபடவில்லை என்பதை நிறுவுகிறார். பரவலின் முழுமையை உணர்த்தும் பட்டியல் இது.

திருவாய்மொழி 6-9 நீராய்‌

3315

நீராய்‌ நிலனாய்த்‌ தீயாய்க்‌ காலாய்‌ நெடுவானாய்‌ சீரார்‌ சுடர்கள்‌ இரண்டாய்ச்‌ சிவனாய்‌ அயனானாய்‌! கூராராழி வெண்சங்கு ஏந்திக்‌ கொடியேன்‌ பால்‌ வாராய்‌ ஒரு நாள்‌ மண்ணும்‌ விண்ணும்‌ மகிழவே

3316

மண்ணும்‌ விண்ணும்‌ மகிழக்‌ குறளாய்‌ வலங்காட்டி மண்ணும்‌ விண்ணும்‌ கொண்ட மாய அம்மானே! நண்ணி உனை நான்‌ கண்டுகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள்‌ ஞாலத்தூடே நடவாயே

3317

ஞாலத்தூடே நடந்தும்‌ நின்றும்‌ கிடந்திருந்தும்‌ சாலப்‌ பல நாள்‌ உகந்தோறு உயிர்கள்‌ காப்பானே! கோலத்‌ திருமாமகளோடு உன்னைக்‌ கூடாதே சாலப்‌ பல நாள்‌ அடியேன்‌ இன்னம்‌ தளர்வேனோ?

3318

தளர்ந்தும்‌ முறிந்தும்‌ சகட அசுரர்‌ உடல்‌ வேறா பிளந்து வீயத்‌ திருக்கால்‌ ஆண்ட பெருமானே! கிளர்ந்து பிரமன்‌ சிவன்‌ இந்திரன்‌ விண்ணவர்‌ சூழ விளங்க ஒரு நாள்‌ காண வாராய்‌ விண்மீதே

3319

விண்மீது இருப்பாய்‌! மலைமேல்‌ நிற்பாய்‌! கடல்‌ சேர்ப்பாய்‌! மண்மீது உழல்வாய்‌! இவற்றுள்‌ எங்கும்‌ மறைந்து உறைவாய்‌! ர எண்மீது இயன்ற புறவண்டத்தாய்‌! எனதாவி உள்மீதாடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ?

3320

பாயோர்‌ அடி வைத்து அதன்‌ கீழ்ப்‌ பரவை நிலம்‌ எல்லாம்‌ தாய்‌ ஓர்‌ அடியால்‌ எல்லா உலகும்‌ தடவந்த மாயோன்‌! உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனை நாளும்‌ தீயோடு உடன்சேர்‌ மெழுகாய்‌ உலகில்‌ திரிவேனோ?

3321

உலகில்‌ திரியும்‌ கரும கதியாய்‌ உலகமாய்‌ உலகுக்கே ஓர்‌ உயிரும்‌ ஆனாய்‌! புறவண்டத்து அலகில்‌ பொலிந்த திசை பத்தாய அருவேயோ! அலகில்‌ பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே

3322

அறிவிலேனுக்கு அருளாய்‌ அறிவார்‌ உயிரானாய்‌! வெறிகொள்‌ சோதி மூர்த்தி! அடியேன்‌ நெடுமாலே! ர கிறிசெய்து என்னைப்‌ புறத்திட்டு இன்னம்‌ கெடுப்பாயோ? பிறிதொன்று அறியா அடியேன்‌ ஆவி திகைக்கவே

3323

ஆவி திகைக்க ஐவர்‌ குமைக்கும்‌ சிற்றின்பம்‌ பாவியேனைப்‌ பல நீ காட்டிப்‌ படுப்பாயோ? தாவி வையம்‌ கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்‌ கொள்ளும்‌ காலம்‌ இன்னம்‌ குறுகாதோ?

3324

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில்‌ இன்பம்‌ சேர்ந்தாலும்‌ மறுகால்‌ இன்றி மாயோன்‌ உனக்கே ஆளாகும்‌ சிறுகாலத்தை உறுமோ? அந்தோ! தெரியிலே

3325

தெரிதல்‌ நினைதல்‌ எண்ணல்‌ ஆகாத்‌ திருமாலுக்கு உரிய தொண்டர்‌ தொண்டர்‌ தொண்டன்‌ சடகோபன்‌ தெரியச்‌ சொன்ன ஓராயிரத்துள்‌ இப்பத்தும்‌ உரிய தொண்டர்‌ ஆக்கும்‌ உலகம்‌ உண்டாற்கே