திருவாய்மொழி 6-8 பொன்னுலகு
6-8. பொன்னுலகு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"பொன்னுலகு ஆளீரோ? புவனி முழுது ஆளீரோ?" — பொன்னுலகை ஆள்வீர்களா, உலகனைத்தையும் ஆள்வீர்களா என்று பறவைகளுக்கு ஆழ்வார் ஊதியம் தரும் பதிகம். தூது சென்றால் என்ன வேண்டுமானாலும் தருவேன் என்று பேரம் பேசுகிறார். வேண்டுதலின் அவசரம் இங்கே கிட்டத்தட்ட நகைச்சுவையாகவே மாறுகிறது.
பொன்னுலகாளீரோ? புவனி முழுதாளீரோ? நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன் முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என்னலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
மையமர் வாள்நெடூங்கண் மங்கைமார் முன்பு என் கையிருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ? கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே
ஓடி வந்து என் குழல் மேல் ஒளிமாமலர் ஊதீரோ? கூடிய வண்டினங்காள்! குருநாடூடை ஐவர்கட்காய் ஆடியமா நெரூந்தேர்ப் படை நீறெழ செற்ற பிரான் சூடிய தண்துளவமுண்ட தூமதுவாய்கள் கொண்டே
தூமதுவாய்கள் கொண்டு வந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள்! பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்து அகன்ற மாமதுவார் தண்துழாய் முடி வானவர் கோனைக் கண்டு யாம் இதுவோ தக்கவாறு? என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்! வெங்கண் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கண் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே
என் மின்னுநூல் மார்வன் என் கரும்பெருமான் என் கண்ணன் தன்மன்னு நீள்கழல் மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான் கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என் ஆழிப்பிரான் மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி பாவைகள்! தீர்க்திற்றிரே வினையாட்டியேன் பாசறவே
பாசறவெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்? ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்து! ஒருநாள் மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்து மற்றே
பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் நீர்த்திரை மேல் உலவி இரை தேரும்புதாவினங்காள்! ர் கார்த்திரள் மாமுகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டருளி உரையீர் வைகல் வந்திருந்தே
வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீரும் எல்லாம் அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்! என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரத்தொன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடிமேல் நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன தோற்றங்கள் ஆயிரத்துள் இஇவையுமொரு பத்தும் வல்லார் ஊற்றின்கண் நுண்மணல் போல் உருகா நிற்பர் நீராயே