Skip to the text
திருவாய்மொழி

6-4. குரவை ஆய்ச்சியர்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும், குன்றம் ஒன்று ஏந்தியதும்" — ஆய்ச்சியருடன் குரவைக் கூத்தாடியதும், குன்றத்தைத் தூக்கியதும், பொய்கையில் நாகத்தை அடக்கியதும் என அவனுடைய செயல்களை அடுக்கும் பதிகம். ஆடலும் காப்பும் அடக்கமும் ஒரே கையால் நிகழ்ந்தவை. விளையாட்டும் வீரமும் அவனிடம் வேறுபடுவதே இல்லை.

திருவாய்மொழி 6-4 குரவை ஆய்ச்சியர்‌

3260

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்‌ குன்றம்‌ ஒன்று ஏந்தியதும்‌ உரவு நீர்ப்‌ பொய்கை நாகம்‌ காய்ந்ததும்‌ உட்பட மற்றும்‌ பல அரவிற்‌ பள்ளிப்‌ பிரான்‌ தன்‌ மாய வினைகளையே அலற்றி இரவும்‌ நன்பகலும்‌ தவிர்கிலம்‌ என்ன குறை நமக்கே?

3261

கேயத்‌ தீங்குழல்‌ ஊதிற்றும்‌ நிரை மேய்த்ததும்‌ கெண்டை ஒண்கண்‌ வாசப்‌ பூங்குழல்‌ பின்னை தோள்கள்‌ மணந்ததும்‌ மற்றும்‌ பல மாயக்‌ கோலப்‌ பிரான்‌ தன்‌ செய்கை நினைந்து மனம்‌ குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம்‌ நிகரே?

3262

நிகரில்‌ மல்லரைச்‌ செற்றதும்‌ நிரை மேய்த்ததும்‌ நீள்‌ நெடூங்கை சிகர மாகளிறு அட்டதும்‌ இவை போல்வனவும்‌ பிறவும்‌ புகர்‌ கொள்‌ சோதிப்‌ பிரான்‌ தன்‌ செய்கை நினைந்து புலம்பி என்றும்‌ நுகர்‌ வைகல்‌ வைகப்‌ பெற்றேன்‌ எனக்கு என்‌ இனி நோவதுவே?

3263

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்‌ வஞ்சப்‌ பெண்ணை சாவப்‌ பால்‌ உண்டதும்‌ ஊர்‌ சகடம்‌ இறச்‌ சாடியதும்‌ தேவக்‌ கோலப்‌ பிரான்‌ தன்‌ செய்கை நினைந்து மனம்‌ குழைந்து மேவக்‌ காலங்கள்‌ கூடினேன்‌ எனக்கு என்‌ இனி வேண்டுவதே?

3264

வேண்டித்‌ தேவர்‌ இரக்க வந்து பிறந்ததும்‌ வீங்கிருள்வாய்‌ பூண்டு அன்று அன்னை புலம்பப்‌ போய்‌ அங்கு ஓர்‌ ஆய்க்குலம்‌ புக்கதும்‌ காண்டலின்றி வளர்ந்து கஞ்சனைத்‌ துஞ்ச வஞ்சம்‌ செய்ததும்‌ ஈண்டு நான்‌ அலற்றப்‌ பெற்றென்‌ எனக்கு என்ன இகல்‌ உளதே?

3265

இகல்‌ கொள்‌ புள்ளைப்‌ பிளந்ததும்‌ இமில்‌ ஏறுகள்‌ செற்றதுவும்‌ உயர்‌ கொள்‌ சோலைக்‌ குருந்து ஒசித்ததும்‌ உட்பட மற்றும்‌ பல அகல்‌ கொள்‌ வையம்‌ அளந்த மாயன்‌ என்‌ அப்பன்‌ தன்‌ மாயங்களே பகல்‌ இராப்‌ பரவப்‌ பெற்றேன்‌ எனக்கு என்ன மனப்‌ பரிப்பே?

3266

மனப்‌ பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்‌ தான்‌ பிறந்து தனக்கு வேண்டூருக்‌ கொண்டு தான்‌ தன சீற்றத்தினை முடிக்கும்‌ புனத்துழாய்‌ முடி மாலை மார்பன்‌ என்‌ அப்பன்‌ தன்‌ மாயங்களே நினைக்கும்‌ நெஞ்சுடையேன்‌ எனக்கு இனி யார்‌ நிகர்‌ நீணிலத்தே?

3267

நீணிலத்தொடு வான்‌ வியப்ப நிறை பெரும்‌ போர்கள்‌ செய்து வாணன்‌ ஆயிரம்‌ தோள்‌ துணித்ததும்‌ உட்பட மற்றும்‌ பல மாணியாய்‌ நிலம்‌ கொண்ட மாயன்‌ என்‌ அப்பன்‌ தன்‌ மாயங்களே காணும்‌ நெஞ்சுடையேன்‌ எனக்கு இனி என்ன கலக்கம்‌ உண்டே?

3268

கலக்க ஏழ்‌ கடல்‌ ஏழ்‌ மலை உலகேமழும்‌ கழியக்‌ கடாய்‌ உலக்கத்‌ தேர்‌ கொடு சென்ற மாயமும்‌ உட்பட மற்றும்‌ பல வலக்கை ஆழி இடக்கை சங்கம்‌ இவையுடை மால்‌ வண்ணனை மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின்‌ மிசையே?

3269

மண்‌ மிசைப்‌ பெரும்‌ பாரம்‌ நீங்க ஓர்‌ பாரத மாபெரும்‌ போர்‌ பண்ணி மாயங்கள்‌ செய்து சேனையைப்‌ பாழ்‌ பட நூற்றிட்டூப்‌ போய்‌ விண்‌ மிசைத்‌ தன தாமமே புக மேவிய சோதி தன்‌ தாள்‌ நண்ணி நான்‌ வணங்கப்‌ பெற்றென்‌ எனக்கு ஆர்‌ பிறர்‌ நாயகரே?

3270

நாயகன்‌ முழு ஏழுலகுக்குமாய்‌ முழு ஏழுலகும்‌ தன்‌ வாயகம்‌ புக வைத்து உமிழ்ந்து அவையாய்‌ அவை அல்லனுமாம்‌ கேசவன்‌ அடியிணை மிசைக்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன தூய ஆயிரத்து இப்பத்தால்‌ பத்தர்‌ ஆவர்‌ துவள்‌ இன்றியே