திருவாய்மொழி 6-3 நல்குரவும்
6-3. நல்குரவும்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய், வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்" — வறுமையும் செல்வமும், நரகமும் சொர்க்கமும், பகையும் நட்பும், நஞ்சும் அமுதமும் அவனே என்று சொல்லும் பதிகம். எதிரெதிரானவற்றை ஒரே பட்டியலில் வைப்பதன் மூலம், நல்லது கெட்டது என்னும் பிரிவினைக்கு அப்பாற்பட்டவனைச் சுட்டுகிறார். தத்துவத்தில் மிக ஆழமான பதிகங்களுள் ஒன்று இது.
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய் கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர் தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய் செய்ய திண்மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய் பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய் தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய் கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றழுமாய் தன்சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப்பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன்னொப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடூமையுமாய் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே