Skip to the text
திருவாய்மொழி

4-7. சீலமில்லா

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"சீலம் இல்லாச் சிறியனேலும், செய்வினையோ பெரிதால்" — நான் ஒழுக்கமற்ற சிறியவன்; ஆனால் நான் செய்த வினையோ பெரிது என்று ஆழ்வார் ஒப்புக்கொள்ளும் பதிகம். ஞானமூர்த்தியே, நாராயணனே என்று அழைத்து அவ்வினையின் நடுவே நின்று வேண்டுகிறார். தன்னைச் சிறியவனாகச் சொல்வதும், அவனைப் பெரியவனாகச் சொல்வதும் ஒரே வாக்கியத்தில் நிகழ்கின்றன.

திருவாய்மொழி 4-7 சீலமில்லா

3073

சீலம்‌ இல்லாச்‌ சிறியனேலும்‌ செய்வினையோ பெரிதால்‌ ஞாலம்‌ உண்டாய்‌! ஞான மூர்த்தி! நாராயணா! என்றென்று காலம்‌ தோறும்‌ யான்‌ இருந்து கைதலை பூசலிட்டால்‌ கோல மேனி காண வாராய்‌ கூவியும்‌ கொள்ளாயே

3074

கொள்ளமாளா இன்ப வெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ வள்ளலேயோ! வையம்‌ கொண்ட வாமனாவோ! என்றென்று நள்ளிராவும்‌ நன்பகலும்‌ நான்‌ இருந்து ஓலமிட்டால்‌ கள்ள மாயா! உன்னை என்‌ கண்‌ காண வந்தீயாயே

3075

ஈவிலாத தீவினைகள்‌ எத்தனை செய்தனன்‌ கொல்‌? தாவி வையம்‌ கொண்ட எந்தாய்‌! தாமோதரா! என்றென்று கூவிக்‌ கூவி நெஞ்சுருகிக்‌ கண்பனி சோர நின்றால்‌ பாவி நீ என்று ஒன்று சொல்லாய்‌ பாவியேன்‌ காண வந்தே

3076

காண வந்து என்கண்‌ முகப்பே தாமரைக்‌ கண்‌ பிறழ ஆணி செம்பொன்‌ மேனி எந்தாய்‌! நின்றருளாய்‌ என்றென்று நாணமில்லாச்‌ சிறுதகையேன்‌ நான்‌ இங்கு அலற்றுவதென்‌? பேணி வானோர்‌ காண மாட்டாப்‌ பீடடை அப்பனையே

3077

அப்பனே! அடலாழியானே! ஆழ்கடலைக்‌ கடைந்த துப்பனே! உன்‌ தோள்கள்‌ நான்கும்‌ கண்டிடக்‌ கூடுங்கொல்‌? என்று எப்பொழுதும்‌ கண்ணநீர்‌ கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து இப்பொழுதே வந்திடாய்‌ என்று ஏழையேன்‌ நோக்குவனே

3078

நோக்கி நோக்கி உன்னைக்‌ காண்பான்‌ யான்‌ எனதாவியுள்ளே நாக்கு நீள்வன்ஞானம்‌ இல்லை நாள்தோறும்‌ என்னுடைய ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ நீக்கம்‌ இன்றி எங்கும்‌ நின்றாய்‌! நின்னை அறிந்தறிந்தே

3079

அறிந்தறிந்து தேறித்‌ தேறி யான்‌ எனதாவியுள்ளே நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து பிறந்தும்‌ செத்தும்‌ நின்றிடறும்‌ பேதைமை தீர்ந்தொழிந்தேன்‌ நறுந்துழாயின்‌ கண்ணியம்மா! நான்‌ உன்னைக்‌ கண்டு கொண்டே

3080

கண்டு கொண்டென்‌ கைகள்‌ ஆர நின்‌ திருப்பாதங்கள்‌ மேல்‌ எண்திசையும்‌ உள்ள பூக்கொண்டு ஏத்தி உகந்துகந்து தொண்டரோங்கள்‌ பாடியாடச்‌ சூழ்கடல்‌ ஞாலத்துள்ளே வண்துழாயின்‌ கண்ணி வேந்தே! வந்திடகில்லாயே

3081

இடகிலேன்‌ ஓன்றட்டகில்லேன்‌ ஐம்புலன்‌ வெல்லகில்லேன்‌ கடவனாகிக்‌ காலம்‌ தோறும்‌ பூப்பறித்து ஏத்தகில்லேன்‌ மடவன்னெஞ்சம்‌ காதல்‌ கூர வல்வினையேன்‌ அயர்ப்பாய்‌ தடவுகின்றேன்‌ எங்குக்‌ காண்பன்‌ சக்கரத்தண்ணலையே?

3082

சக்கரத்தண்ணலே! என்று தாழ்ந்து கண்ணீர்‌ ததும்ப பக்கம்‌ நோக்கி நின்றலந்தேன்‌ பாவியேன்‌ காண்கின்றிலேன்‌ மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்‌ தக்க ஞானக்‌ கண்களாலே கண்டு தழுவுவனே

3083

தழுவி நின்ற காதல்‌ தன்னால்‌ தாமரைக்‌ கண்ணன்‌ தன்னை குழுவு மாடத்‌ தென்குருகூர்‌ மாறன்‌ சடகோபன்‌ சொல்‌ வழுவிலாத ஒண்தமிழ்கள்‌ ஆயிரத்துள்‌ இப்பத்தும்‌ தழுவப்‌ பாடியாட வல்லார்‌ வைகுந்தம்‌ ஏறுவரே