நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ
3-8. நல்லதோர் தாமரை
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
மகள் மேனி வாடியதைத் தாய் வருந்திச் சொல்லும் பதிகம். பனி விழுந்து அல்லியும் தாதும் உதிர்ந்து அழகழிந்த தாமரைப் பொய்கையைப் போல் ஆகிவிட்டாள் என்கிறாள். வேடர் குலம் போல் விரும்பியதைச் செய்து என் மகளைக் கொண்டு அவன் குடி வாழ்வானோ என்று கேட்கிறாள். காதலின் நோயும் அதைக் காணும் தாயின் கையாலாகாத் தன்மையும் இங்கே ஒன்றாகின்றன.
பெரியாழ்வார் திருமொழி 3-8 நல்லதோர் தாமரை (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக் கூறும் பாசுரம்)
ஒன்றும் அறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்றுகால் மாறுமா போலே கன்னியிருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக்கொல் ஆயிடூங்கொலோ
குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்திருத்தி தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கென்று சாற்றி அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழிபட்டு துமிலமெழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங்கொலோ
ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான் பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப்புறம் செய்யுங்கொலோ
தம்மாமன் நந்தகோபாலன் தழீ இக்கொண்டு என்மகள் தன்னை செம்மாந்திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும் செவ்வாயும் கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டூ இம்மகளைப் பெற்ற தாயர் இனித்தரியார் என்னறுங்கொலோ
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என்மகளை கூடிய கூட்டமேயாகக் கொண்டு குடி வாழுங்கொலோ நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவாகைப் பற்றுங்கொலோ
அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்று என்மகளை பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடூங்கொலோ கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங்கொலோ
குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் இடை இருபாலும் வணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடூங்கொலோ
வெண்ணிறத்தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து கண்ணுறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள் கொலோ ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என்மகளை பண்ணறையாப் பணிகொண்டு பரிசற ஆண்டிடூங்கொலோ
மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமுமெல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைத் தண்புதுவைப் பட்டன் சொன்ன தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணனுக்காளரே