திருவாய்மொழி 4-4 மண்ணை
4-4. மண்ணை
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்" — மண்ணைக் கையால் துழாவி "இது வாமனன் அளந்த மண்" என்று சொல்வதும், வானத்தைத் தொழுது "அவன் வைகுந்தம்" என்பதுமாய் அலையும் மகளின் நிலையைத் தாய் சொல்கிறாள். எதைப் பார்த்தாலும் அவனை நினைவுபடுத்துவதே இப்பதிகத்தின் மையம். காதல் நோயின் அறிகுறிகள் மிக நுட்பமாகப் பதிவாகின்றன.
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இதுவென்னும் விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும் கண்ணையுண்ணீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே! என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன்? பெய்வளையீரே!
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான் கிடக்கும் கடல் என்னும் செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈதென்னும் நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே! என் தெய்வ உருவில் சிறுமான் செய்கின்றது ஒன்றறியேனே
அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய்வேவாள் எறியும் தண்காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும் வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றதென் கண்ணுக்கொன்றே
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே! என்னும் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா என்று கூவும் நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே
கோமள வான்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈதென்னும் ஆமள ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற கோமளவல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே
கூத்தர் குடமெடூத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈதென்னும் பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்கொடு ஏறிய பித்தே!
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பென்னும் நீறு செவ்வேயிடக் காணில் நெடுமால் அடியார் என்றோடும் நாறுதுழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈதென்னும் தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனனே இத்திருவே
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந்தான் என்று துள்ளும் கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் மோவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே
விரும்பிப் பகவரைக் காணில் வியலிடம் உண்டானே! என்னும் கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்றேறப் பறக்கும் பெரும்புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கும் அகலவே நீள்நோக்குக் கொள்ளும் வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க்கொள்ளும் மெய்சோரும் பெயர்த்தும் கண்ணா! என்று பேசும் பெருமானே! வா என்று கூவும் மயல் பெருங்காதல் என் பேதைக்கு என் செய்கேன்? வல்வினையேனே
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குருகூர்ச் சடகோபன் சொல்வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி தொல்வினை தீர எல்லாரும் தொழுதெழ விற்றிருப்பாரே 11 ஓவாள் நோக்கி