திருவாய்மொழி 3-9 சொன்னால்
3-9. சொன்னால்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன், கேண்மினோ" — இதைச் சொன்னால் பலருக்கு உவப்பாக இராது, ஆயினும் சொல்கிறேன், கேளுங்கள் என்று ஆழ்வார் தொடங்கும் பதிகம். என் நாவால் இனிய கவி வேறு எவருக்கும் பாடமாட்டேன் என்று அறுதியிடுகிறார். புரவலரைப் புகழ்ந்து பாடும் மரபை நேரடியாக மறுக்கும் துணிச்சல் இது. கவிஞனின் சுதந்திரம் ஒரு சரணாகதியாக மாறும் இடம்.
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் தென்னாதெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவி பாடி என்? குளனார் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே
ஒழிவு ஒன்றில்லாத பல்லூழிதோறூழி நிலாவ போம் வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய் ர கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்! இஇழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?
என்னாவது? எத்தெனை நாளைக்குப் போதும்? புலவீர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள் மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே
கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்! கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ
வம்மின் புலவீர்! நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ இம்மன்னுலகினில் செல்வர் இப்போதில்லை நோக்கினோம் நும் இன்கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே
சேரும் கொடை புகழ் எல்லையிலானை ஓராயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் ர மாரி அனைய கை மால்வரை ஒக்கும் திண்தோள் என்று பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன் மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே?
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன் சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றியொன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல் ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே