Skip to the text
திருவாய்மொழி

3-6. செய்யதாமரை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"செய்ய தாமரைக் கண்ணனாய் உலகேழும் உண்ட அவன் கண்டீர்" — உலகனைத்தையும் உண்டவன் இவனே பாருங்கள் என்று சுட்டிக்காட்டும் பதிகம். வையமும் வானமும் மனிதரும் தெய்வமும் அவனுள் அடங்குவதைச் சொல்கிறார். "கண்டீர்" என்ற விளி இப்பதிகத்தை ஓர் அறிவிப்பாக்குகிறது — தனக்குள் சொல்லிக்கொள்வதல்ல, பிறருக்குக் காட்டுவது.

திருவாய்மொழி 3-6 செய்யதாமரை

2952

செய்ய தாமரைக்‌ கண்ணனாய்‌ உலகேழும்‌ உண்ட அவன்‌ கண்டீர்‌ வையம்‌ வானம்‌ மனிசர்‌ தெய்வம்‌ மற்றும்‌ மற்றும்‌ மற்றும்‌ முற்றுமாய்‌ செய்ய சூழ்‌ சுடர்‌ ஞானமாய்‌ வெளிப்பட்டிவை படைத்தான்‌ பின்னும்‌ மொய்கொள்‌ சோதியோடு ஆயினான்‌ ஒரு மூவர்‌ ஆகிய மூர்த்தியே

2953

மூவராகிய மூர்த்தியை முதல்‌ மூவர்க்கும்‌ முதல்வன்‌ தன்னை சாவமுள்ளன நீக்குவானைத்‌ தடங்கடல்‌ கிடந்தான்‌ தன்னைத்‌ தேவதேவனைத்‌ தென்னிலங்கை எரியெழச்‌ செற்ற வில்லியை பாவ நாசனைப்‌ பங்கயத்‌ தடங்‌ கண்ணனைப்‌ பரவுமினோ

2954

பரவி வானவர்‌ ஏத்த நின்ற பரமனைப்‌ பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக்‌ குடக்‌ கூத்தனை ர்‌ அரவமேறி அலைகடல்‌ அமரும்‌ துயில்‌ கொண்ட அண்ணலை இரவும்‌ நன்பகலும்‌ விடாது என்றும்‌ ஏத்துதல்‌ மனம்‌ வைம்மினோ

2955

வைம்மின்‌ நும்‌ மனத்து என்று யான்‌ உரைக்கின்ற மாயவன்‌ சீர்மையை எம்மனோர்கள்‌ உரைப்பதென்‌? அது நிற்க நாள்தொறும்‌ வானவர்‌ தம்மை ஆளும்‌ அவனும்‌ நான்முகனும்‌ சடைமுடி அண்ணலும்‌ செம்மையால்‌ அவன்‌ பாத பங்கயம்‌ சிந்தித்து ஏத்தித்‌ திரிவரே

2956

திரியும்‌ கற்றொடு அகல்விசும்பு திணிந்த மண்‌ கிடந்த கடல்‌ எரியும்‌ தீயோடு இருசுடர்‌ தெய்வம்‌ மற்றும்‌ மற்றும்‌ முற்றுமாய்‌ கரிய மேனியன்‌ செய்ய தாமரைக்‌ கண்ணன்‌ கண்ணன்‌ விண்ணோர்‌ இறை சரியும்‌ பல்கருங்குஞ்சி எங்கள்‌ சுடர்முடு அண்ணல்‌ தோற்றமே

2957

தோற்றக்‌ கேடவை இல்லவன்‌ உடையான்‌ அவன்‌ ஒரு மூர்த்தியாய்‌ சீற்றத்தோடு அருள்‌ பெற்றவன்‌ அடிக்‌ கீழ்ப்‌ புக நின்ற செங்கண்மால்‌ நாற்றத்‌ தோற்றச்‌ சுவையொலி உறலாகி நின்ற எம்‌ வானவர்‌ ஏற்றையே அன்றி மற்றொருவரை யான்‌ இலேன்‌ எழுமைக்குமே

2958

எழுமைக்கும்‌ எனதாவிக்கு இன்னமுதத்தினை எனதாருயிர்‌ கெழுமிய கதிர்ச்சோதியை மணி வண்ணனைக்‌ குடக்‌ கூத்தனை ர்‌ விழுமிய அமரர்‌ முனிவர்‌ விழுங்கும்‌ கன்னல்‌ கனியினை தொழுமின்‌ தூய மனத்தராய்‌ இறையும்‌ நில்லா துயரங்களே

2959

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்‌ அவை அல்லனாய்‌ உயர நின்றதோர்‌ சோதியாய்‌ உலகேழும்‌ உண்டு உமிழ்ந்தான்‌ தன்னை அயர வாங்கு நமன்‌ தமர்க்கு அருநஞ்சினை அச்சுதன்‌ தன்னை தயரதற்கு மகன்‌ தன்னை அன்றி மற்றிலேன்‌ தஞ்சமாகவே

2960

தஞ்சமாகிய தந்தை தாயொடு தானுமாய்‌ அவை அல்லனாய்‌ எஞ்சலில்‌ அமரர்‌ குல முதல்‌ மூவர்‌ தம்முள்ளும்‌ ஆதியை அஞ்சி நீருலகத்துள்ளீர்கள்‌! அவன்‌ இவன்‌ என்று கூழேன்மின்‌ நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவன்‌ அவனாகும்‌ நீள்கடல்‌ வண்ணனே

2961

கடல்வண்ணன்‌ கண்ணன்‌ விண்ணவர்‌ கருமாணிக்கம்‌ எனதாருயிர்‌ பட அரவின்‌ அணைக்‌ கிடந்த பரஞ்சுடர்‌ பண்டு நூற்றுவர்‌ அடவரும்‌ படை மங்க ஐவர்கட்காகி வெஞ்சமத்து அன்று தேர்‌ கடவிய பெருமான்‌ கனைகழல்‌ காண்பது என்று கொல்‌ கண்களே?

2962

கண்கள்‌ காண்டற்கரியனாய்க்‌ கருத்துக்கு நன்றும்‌ எளியனாய்‌ மண்கொள்‌ ஞாலத்து உயிர்க்கெல்லாம்‌ அருள்‌ செய்யும்‌ வானவர்‌ ஈசனை பண்கொள்‌ சோலை வழுதி நாடன்‌ குருகைக்‌ கோன்‌ சடகோபன்‌ சொல்‌ பண்கொள்‌ ஆயிரத்து இப்பத்தால்‌ பத்தராகக்‌ கூடும்‌ பயிலுமினே