திருவாய்மொழி 3-2 முந்நீர்ஞாலம்
3-2. முந்நீர்ஞாலம்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்" — நீயே தந்த இவ்வுடலின் வழியே அலைகிறேன் என்று ஆழ்வார் முறையிடும் பதிகம். குற்றம் தன்னுடையதா, உடலைத் தந்தவனுடையதா என்ற கேள்வியை அவர் மறைக்கவில்லை. முறையீட்டிலும் உரிமை ஒலிக்கிறது — கேட்பவனிடமே கேட்கும் துணிச்சல் இது.
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே! அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் வெந்நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?
வன்மா வையம் அளந்த எம் வாமனா! நின் பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்ற யான் தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து நின்மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ?
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்த எந்தாய்! பொல்லா ஆக்கையின் புணர் வினை அறுக்கலறா சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே
சூழ்ச்சி ஞானச் சுடரொளி ஆகி என்றும் ஏழ்ச்சிக் கேடின்றி எங்ஙணும் நிறைந்த எந்தாய்! தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து நின் தாளிணக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ சிந்தாமல் செய்யாய் இதுவே இதுவாகில் கொந்தார் காயாவின் கொழுமலர்த் திருநிறத்த எந்தாய்! யான் உன்னை எங்கு வந்தணுகிற்பனே?
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் ர் பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா! நின் நற்பொற்சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே?
எஞ்ஞான்று நாம் இருந்திருந்து இரங்கி நெஞ்சே! மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பழுந்தி எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் பாவுதொல் சீர்க் கண்ணா! என் பரஞ்சுடரே! கூவுகின்றேன் காண்பான் எங்கெய்தக் கூவுவனே?
கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழி திகைத்து அலமர்கின்றேன் மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே?
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடூயிரே
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் செயிரில் சொல்லிசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும் உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே