திருவாய்மொழி 2-8 அணைவது
2-8. அணைவது
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"அணைவது அரவணை மேல்; பூம்பாவை ஆகம் புணர்வது" — பாம்பணை மேல் துயில்வதும், திருமகளின் திருமேனியுடன் கூடியிருப்பதும் அவனுடைய நிலை என்று சொல்லும் பதிகம். எதனோடும் இணையக்கூடியவன், எப்பொருளுக்கும் அப்பாற்பட்டவன் என்று ஒரே மூச்சில் சொல்கிறார். வரையறைகளை மீறுவதே அவனுடைய வரையறை.
அணைவது அரவணை மேல் பூம்பாவை ஆகம் புணர்வது இருவரவர் முதலும் தானே இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே
நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் துயரில்லா வீடு முதலாம் பூந்தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த பூந்தண்துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம் புணர்த்த தன் உந்தியோடு ஆகத்து மன்னி புணர்த்த திருவாகித் தன் மார்வில் தான் சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே
புலன் ஐந்துமேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லதோர் நாடு புகுவீர் அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலழுந்து சீரில் படிமின் ஓவாதே
ஒவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ்வெவையும் மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன் மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
தீர்த்தன் உலகளந்த சேவடிமேல் பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?
கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம்பெருந்தோள் ஆரத்தழுவும் பாரென்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே?
காண்பார் ஆர்? எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு? ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்றாற்றா சேண்பால வீடோ உயிரோ மற்று எப்பொருட்கும் ஏண்பாலும் சோரான் பரந்துளனாம் எங்குமே
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?
சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா ஈர்மைகொள் தேவர் நடூவா மற்று எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கண்தலங்கள் செய்ய கருமேனி அம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் பண்தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் விண்தலையில் விற்றிருந்து ஆள்வர் எம்மாவீடே