Skip to the text
திருவாய்மொழி

2-3. ஊனில்வாழ்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"ஊனில் வாழ் உயிரே! நல்லை போ" — உடலில் வாழும் தன் உயிரையே விளித்து, "நீ நல்லவள்" என்று ஆழ்வார் பாராட்டும் பதிகம். உன்னைப் பெற்றதால் வானுளார் பெருமானை அடைந்தேன் என்று தன் உயிருக்கே நன்றி சொல்கிறார். தன்னைத் தானே எள்ளும் மரபிலிருந்து விலகி, தன்னுள் இருக்கும் நல்லதை ஏற்கும் அரிய தருணம் இது.

திருவாய்மொழி 2-3 ஊனில்வாழ்‌

2807

ஊனில்‌ வாழுயிரே! நல்லை போ உன்னைப்‌ பெற்று வானுளார்‌ பெருமான்‌ மதுசூதன்‌ என்னம்மான்‌ தானும்‌ யானும்‌ எல்லாம்‌ தன்னுள்ளே கலந்தொழிந்தோம்‌ தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ அழுதுமொத்தே

2808

ஒத்தார்‌ மிக்காரை இலையாய மாமாயா! ஒத்தாய்‌ எப்பொருட்கும்‌ உயிராய்‌ என்னைப்‌ பெற்ற அத்தாயாய்த்‌ தந்தையாய்‌ அறியாதன அறிவித்த! அத்தா! நீ செய்தன அடியேன்‌ அறியேனே

2809

அறியாக்‌ காலத்துள்ளே அடிமைக்கண்‌ அன்பு செய்வித்து அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்‌ அறியாமைக்‌ குறளாய்‌ நிலம்‌ மாவலி! மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய்‌ எனதாவியுள்‌ கலந்தே

2810

எனதாவியுள்‌ கலந்த பெரு நல்லுதவிக்‌ கைம்மாறு எனதாவி தந்தொழிந்தேன்‌ இனி மீள்வது என்பதுண்டே? எனதாவி ஆவியும்‌ நீ பொழில்‌ ஏழும்‌ உண்ட எந்தாய்‌! எனதாவியார்‌? யான்‌ ஆர்‌? தந்த நீ கொண்டாக்கினையே

2811

இனியார்‌ ஞானங்களால்‌ எடுக்கலெழாத எந்தாய்‌ கனிவார்‌ வீட்டின்பமே! என்‌ கடல்படா அமுதே! '" அறிவித்து தனியேன்‌ வாழ்‌ முதலே! பொழில்‌ ஏழும்‌ ஏனமொன்றாய்‌ நுனியார்‌ கோட்டில்‌ வைத்தாய்‌ உனபாதம்‌ சேர்ந்தேனே

2812

சேர்ந்தார்‌ தீவினைகட்கு அருநஞ்சைத்‌ திண்மதியை தீர்ந்தார்‌ தம்‌ மனத்துப்‌ பிரியாத அருயிரை சோர்ந்தே போகல்‌ கொடாச்‌ சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன்‌ அடைந்தேன்‌ முதல்‌ முன்னமே

2813

முன்‌ நல்யாழ்‌ பயில்‌ நூல்‌ நரம்பின்‌ முதிர்‌ சுவையே! பன்னலார்‌ பயிலும்‌ பரனே! பவித்திரனே! கன்னலே! அமுதே! கார்முகிலே! என்‌ கண்ணா! நின்னலால்‌ இலேன்‌ காண்‌ என்னை நீ குறிக்கொள்ளே

2814

குறிக்கொள்‌ ஞானங்களால்‌ எனையூழி செய்தவமும்‌ கிறிக்கொண்டு இப்பிறப்பே சில நாளில்‌ எய்தினன்‌ யான்‌ உறிக்கொண்ட வெண்ணெய்‌ பால்‌ ஒளித்துண்ணும்‌ அம்மான்‌ பின்‌ நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்‌ பிறவித்துயர்‌ கடிந்தே

2815

கடிவார்‌ தண்ணந்துழாய்க்‌ கண்ணன்‌ விண்ணவர்‌ பெருமான்‌ படிவானமிறந்த பரமன்‌ பவித்திரன்‌ சீர்‌ செடியார்‌ நோய்கள்‌ கெடப்‌ படிந்து குடைந்தாடி அடியேன்‌ வாய்‌ மடுத்துப்‌ பருகிக்‌ களித்தேனே

2816

களிப்பும்‌ கவர்வும்‌ அற்றுப்‌ பிறப்புப்‌ பிணி மூப்பு இறப்பற்று ஒளிக்கொண்ட சோதியுமாய்‌ உடன்கூடுவது என்று கொலோ? துளிக்கின்ற வானிந்நிலம்‌ சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே

2817

குழாங்கொள்‌ பேரரக்கன்‌ குலம்‌ விய முனிந்தவனை குழாங்கொள்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ தெரிந்துரைத்த குழாங்கொள்‌ ஆயிரத்துள்‌ இவை பத்தும்‌ உடன்‌ பாடி குழாங்களாய்‌ அடியீருடன்‌ கூடி நின்றாடூுமினே