Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

3-4. தழைகளும்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

கோவிந்தன் மந்தையுடன் ஊர் திரும்பும் காட்சி. தழைகளும் தொங்கலும் ததும்ப, தண்ணுமையும் மத்தளமும் முழங்க, குழலோசையும் இசையும் எங்கும் நிறைய அவன் வருகிறான். நெற்றியில் சிந்தூரமும் திருத்திய கோறம்பும் ஒளிர, தழைக்காவின் கீழ் நடந்து வருகிறான். ஒரு மாலைப்பொழுதின் ஊர்வலத்தை அப்படியே கண்முன் நிறுத்தும் பதிகம்.

பெரியாழ்வார்‌ திருமொழி 3-4 தழைகளும்‌ (காலிப்‌ பின்னே வரும்‌ கண்ணனைக்‌ கண்டு இடைக்கன்னியர்‌ காமுறுதல்‌)

254

தழைகளும்‌ தொங்கலும்‌ ததும்பி எங்கும்‌ தண்ணுமை எக்கம்‌ மத்தளி தாழ்‌ பீலி குழல்களும்‌ கீதமுமாகி எங்கும்‌ கோவிந்தன்‌ வருகின்ற கூட்டம்‌ கண்டு மழை கொலோ வருகின்றதென்று சொல்லி மங்கைமார்‌ சாலக வாசல்‌ பற்றி நுழைவனர்‌ நிற்பனராகி எங்கும்‌ உள்ளம்‌ விட்டு ஊண்‌ மறந்தொழிந்தனரே

255

வல்லி நுண்‌ இதழன்ன ஆடை கொண்டு வசையறத்‌ திருவரை விரித்துடுத்து பல்லி நுண்‌ பற்றாக உடைவாள்‌ சாத்திப்‌ பணைக்கச்சுந்திப்‌ பல தழை நடுவே முல்லை நல்‌ நறுமலர்‌ வேங்கை மலர்‌ அணிந்து பல்லாயர்‌ குழாம்‌ நடூவே எல்லியம்‌ போதாகப்‌ பிள்ளை வரும்‌ எதிர்‌ நின்று அங்கினவளை இழவேன்மினே

256

சுரிகையும்‌ தெறிவில்லும்‌ செண்டுகோலும்‌ மேலாடையும்‌ தோழன்மார்‌ கொண்டோட ஒரு கையால்‌ ஒருவன்‌ தன்‌ தோளை ஊன்றி ஆனிரை இனம்‌ மீளக்‌ குறித்த சங்கம்‌ வருகையில்‌ வாடிய பிள்ளை கண்ணன்‌ மஞ்சளும்‌ மேனியும்‌ வடிவும்‌ கண்டாள்‌ அருகே நின்றாள்‌ என்‌ பெண்‌ நோக்கிக்‌ கண்டாள்‌ அது கண்டு இவ்வூர்‌ ஒன்று புணர்க்கின்றதே

257

குன்றெடுத்து ஆனிரை காத்த பிரான்‌ கோவலனாய்க்‌ குழலூதி ஊதி கன்றுகள்‌ மேய்த்துத்‌ தன்‌ தோழரோடு கலந்துடன்‌ வருவானைத்‌ தெருவில்‌ கண்டு என்றும்‌ இவனை ஒப்பாரை நங்காய்‌ கண்டறியேன்‌ ஏடி வந்து காணாய்‌ ஒன்றும்‌ நில்லா வளை கழன்று துகிலேந்திளமுலையும்‌ என்‌ வசம்‌ அல்லவே

258

சுற்றி நின்று ஆயர்‌ தழைகளிடச்‌ சுருள்‌ பங்கி நேத்திரத்தால்‌ அணிந்து பற்றி நின்று ஆயர்‌ கடைத்தலையே பாடவும்‌ ஆடக்கண்டேன்‌ அன்றிப்‌ பின்‌ மற்றொருவர்க்கு என்னைப்‌ பேசல்‌ ஒட்டேன்‌ மாலிருஞ்சோலை எம்‌ மாயற்கல்லால்‌ கொற்றவனுக்கு இவளாமென்றெண்ணிக்‌ கொடுமின்கள்‌ கொடராகில்‌ கோழம்பமே

259

சிந்துரம்‌ இலங்கத்‌ தன்‌ திருநெற்றி மேல்‌ திருத்திய கோறம்பும்‌ திருக்குழலும்‌ அந்தரமுழவத்‌ தண்‌ தழைக்காவின்‌ கீழ்‌ வருமாயரோடு உடன்வளை கோல்‌ வீச அந்தமொன்றில்லாத ஆயப்‌ பிள்ளை அறிந்தறிந்து இவ்வீதி போதுமாகில்‌ பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப்‌ பவளவாய்‌ முறுவலும்‌ காண்போம்‌ தோழீ

260

சாலப்பல்‌ நிரைப்‌ பின்னே தழைக்காவின்‌ கீழ்‌ தன்‌ திருமேனி நின்றொளி திகழ நீல நல்‌ நறுங்குஞ்சி நேத்திரத்தால்‌ அணிந்து பல்லாயர்‌ குழாம்‌ நடுவே கோலச்‌ செந்தாமரைக்‌ கண்‌ மிளிரக்‌ குழலூதி இசை பாடிக்‌ குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப்‌ பிள்ளை அழகு கண்டு என்‌ மகள்‌ அயர்க்கின்றதே

261

சிந்துரப்‌ பொடிக்‌ கொண்டு சென்னி அப்பித்‌ திருநாமமிட்டு அங்கோரிலையன்‌ தன்னால்‌ அந்தரமின்றித்‌ தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத்தால்‌ அணிந்து இந்திரன்‌ போல்‌ வரு மாயப்‌ பிள்ளை எதிர்‌ நின்றங்கினவளை இழவேல்‌ என்ன சந்தியில்‌ நின்று கண்டீர்‌ நங்கை தன்‌ துகிலொடு சரிவளை கழல்கின்றதே

262

வலங்காதின்‌ மேல்‌ தோன்றிப்‌ பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல்‌ மாலை சிலிங்காரத்தால்‌ குழல்‌ தாழ விட்டுத்‌ தீங்குழல்வாய்‌ மடுத்தூதி ஊதி அலங்காரத்தால்‌ வரு மாயப்‌ பிள்ளை அழகு கண்டு என்‌ மகள்‌ ஆசைப்பட்டு விலங்கி நில்லாது எதிர்‌ நின்று கண்டீர்‌ வெள்வளை கழன்று மெய்ம்மெலிகின்றதே

263

விண்ணின்‌ மீது அமரர்கள்‌ விரும்பித்‌ தொழ மிறைத்து ஆயர்பாடியில்‌ வீதியூடே கண்ணன்‌ காலிப்‌ பின்னே எழுந்தருளக்‌ கண்டு இளவாய்க்‌ கன்னிமார்‌ காமுற்ற வண்ணம்‌ வண்டமர்‌ பொழில்‌ புதுவையர்‌ கோன்‌ விட்டுசித்தன்‌ சொன்ன மாலை பத்தும்‌ பண்‌ இன்பம்‌ வரப்பாடும்‌ பத்தருள்ளார்‌ பரமான வைகுந்தம்‌ நண்ணுவரே