Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

3-3. சீலைக்குதம்பை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

ஒரு காதில் சீலைக் குதம்பையும் மறு காதில் செம்பூவும் அணிந்த குழந்தையின் அழகை வருணிக்கும் பதிகம். அணிகலன்களைச் சொல்லிச் சொல்லி மகிழும் தாய், திடீரென அஞ்சுகிறாள்: "பொய்கையில் புகுந்து நஞ்சுமிழ் நாகத்துடன் பிணங்கினாயே, நான் எப்படி உயிர் வாழ்ந்திருந்தேன்?" அழகில் மயங்கும் மனமும் அவனது துணிச்சலை நினைத்து நடுங்கும் மனமும் மாறிமாறி வருகின்றன.

பெரியாழ்வார்‌ திருமொழி 3-3 சீலைக்குதம்பை (கண்ணன்‌ கன்றுகள்‌ மேய்த்து வரக்‌ கண்டு யசோதை மகிழ்தல்‌)

244

சீலைக்குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல்‌ தோன்றிப்‌ பூ கோலப்பணைக்‌ கச்சும்‌ கூறை உடையும்‌ குளிர்‌ முத்தின்‌ கோடாலமும்‌ காலிப்‌ பின்னே வருகின்ற கடல்வண்ணன்‌ வேடத்தை வந்து காணீர்‌ ஞாலத்துப்‌ புத்திரனைப்‌ பெற்றார்‌ நங்கைமீர்‌ நானே மற்றாருமில்லை

245

கன்னி நன்மா மதிள்சூழ்‌ தரு பூம்பொழில்‌ காவிரித்‌ தென்னரங்கம்‌ மன்னிய சீர்‌ மதுசூதனா கேசவா பாவியேன்‌ வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச்‌ சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்‌ என்னின்‌ மனம்‌ வலியாள்‌ ஒரு பெண்‌ இல்லை என்‌ குட்டனே முத்தம்‌ தா

246

காடுகளூடு போய்க்‌ கன்றுகள்‌ மேய்த்து மறியோடி கார்க்கோடல்‌ பூச்‌ சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்‌ தூளி காண்‌ உன்‌ உடம்பு பேடை மயில்‌ சாயற்‌ பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன்‌ ஆடி அழுதுசெய்‌ அப்பனுமுண்டிலன்‌ உன்னோடு உடனேயுண்பான்‌

247

கடியார்‌ பொழிலணி வேங்கடவா கரும்‌ போரேறே நீ உகக்கும்‌ குடையும்‌ செருப்பும்‌ குழலும்‌ தருவிக்கக்‌ கொள்ளாதே போனாய்‌ மாலே கடிய வெங்கானிடைக்‌ கன்றின்‌ பின்‌ போன சிறுக்‌ குட்டச்‌ செங்கமல அடியும்‌ வெதும்பி உன்‌ கண்கள்‌ சிவந்தாய்‌ அசைந்திட்டாய்‌ நீ எம்பிரான்‌

248

பற்றார்‌ நடுங்க முன்‌ பாஞ்சசன்னியத்தை வாய்‌ வைத்த போரேறே என்‌ சிற்றாயர்‌ சிங்கமே சீதை மணாளா சிறுக்‌ குட்டச்‌ செங்கண்மாலே சிற்றாடையும்‌ சிறுப்‌ பத்திரமும்‌ இவை கட்டிலின்‌ மேல்‌ வைத்துப்‌ போய்‌ கற்றாயரோடு நீ கன்றுகள்‌ மேய்த்துக்‌ கலந்துடன்‌ வந்தாய்‌ போலும்‌

249

அஞ்சுடராழி உன்‌ கையகத்தேந்தும்‌ அழகா நீ பொய்கை புக்கு நஞ்சுமிழ்‌ நாகத்தினோடு பிணங்கவும்‌ நான்‌ உயிர்‌ வாழ்ந்திருந்தேன்‌ என்‌ செய்ய என்னை வயிறு மறுக்கினாய்‌ ஏதுமோர்‌ அச்சமில்லை கஞ்சன்‌ மனத்துக்கு உகப்பனவே செய்தாய்‌ காயாம்பூ வண்ணம்‌ கொண்டாய்‌

250

பன்றியும்‌ ஆமையும்‌ மீனமும்‌ ஆகிய பாற்கடல்‌ வண்ணா உன்‌ மேல்‌ கன்றின்‌ உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்‌ தன்னை சென்று பிடித்துச்‌ சிறுக்‌ கைகளாலே விளங்கா எறிந்தாய்‌ போலும்‌ என்றும்‌ என்‌ பிள்ளைக்குத்‌ தீமைகள்‌ செய்வார்கள்‌ அங்ஙனம்‌ ஆவர்களே

251

கேட்டறியாதன கேட்கின்றேன்‌ கேசவா கோவலர்‌ இந்திரற்கு கட்டிய சோறும்‌ கறியும்‌ தயிரும்‌ கலந்துடன்‌ உண்டாய்‌ போலும்‌ ஊட்டமுதலிலேன்‌ உன்‌ தன்னைக்‌ கொண்டு ஒரு போதும்‌ எனக்கரிது வாட்டமிலாப்‌ புகழ்‌ வாசுதேவா உன்னை அஞ்சுவன்‌ இன்று தொட்டும்‌

252

திண்ணார்‌ வெண்சங்குடையாய்‌ திருநாள்‌ திருவோணம்‌ இன்றேறழு நாள்‌ முன்‌ பண்ணேர்‌ மொழியாரைக்‌ கூவி முளையட்டிப்‌ பல்லாண்டு கூறுவித்தேன்‌ கண்ணாலம்‌ செய்யக்‌ கறியும்‌ கலத்ததரிசியும்‌ ஆக்கி வைத்தேன்‌ கண்ணா நீ நாளைத்‌ தொட்டுக்‌ கன்றின்‌ பின்‌ போகேல்‌ கோலம்‌ செய்திங்கே இரு

253

புற்றரவல்குல்‌ அசோதை நல்லாய்ச்சி தன்‌ புத்திரன்‌ கோவிந்தனை கற்றினம்‌ மேய்த்து வரக்‌ கண்டுகந்து அவள்‌ கற்பித்த மாற்றமெல்லாம்‌ செற்றமிலாதவர்‌ வாழ்தரு தென்புதுவை விட்டுசித்தன்‌ சொல்‌ கற்றிவை பாட வல்லார்‌ கடல்வண்ணன்‌ கழலிணை காண்பர்களே