Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

3-2. அஞ்சன வண்ணனை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"வீடுவீடாகத் திரியாமல் இரு" என்று கண்ணனை மஞ்சனமாட்டி அடக்க முயலும் பதிகம். கஞ்சனை உதைத்த திருவடிகள் நோகுமே, காட்டில் திரியாதே என்று தாய் வேண்டுகிறாள். வெண்ணெயை விழுங்கிவிட்டு ஊரெங்கும் படிறு செய்து திரிவதைக் கண்டித்தும் செல்லம் கொஞ்சியும் பேசுகிறாள். தடுக்க முடியாத ஒன்றைத் தடுக்க முயலும் தாயின் பரிவே இதன் சுவை.

பெரியாழ்வார்‌ திருமொழி 3-2 அஞ்சன வண்ணனை (யசோதைப்‌ பிராட்டி கண்ணனைக்‌ கன்றின்‌ பின்‌ போக்கினதை எண்ணி அநுதபித்தல்‌)

234

அஞ்சன வண்ணனை ஆயர்‌ குலக்‌ கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள்‌ தோறும்‌ திரியாமே கஞ்சனைக்‌ காய்ந்த கழலடி நோவக்‌ கன்றின்‌ பின்‌ என்‌ செயப்‌ பிள்ளையைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

235

பற்று மஞ்சள்‌ பூசிப்‌ பாவைமாரொடு பாடியில்‌ சிற்றில்‌ சிதைத்து எங்கும்‌ தீமை செய்து திரியாமே கற்றுத்‌ தூளியுடை வேடர்‌ கானிடைக்‌ கன்றின்‌ பின்‌ எற்றுக்கு என்‌ பிள்ளையைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

236

நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும்‌ பொன்மணி மேனி புழுதியாடித்‌ திரியாமே கன்மணி நின்றதிர்‌ கானதரிடைக்‌ கன்றின்‌ பின்‌ என்‌ மணிவண்ணனைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

237

வண்ணக்‌ கருங்குழல்‌ மாதர்‌ வந்து அலர்‌ தூற்றிட பண்ணிப்‌ பல செய்து இப்பாடி எங்கும்‌ திரியாமே கண்ணுக்கினியானைக்‌ கானதரிடைக்‌ கன்றின்‌ பின்‌ எண்ணற்கரியானைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

238

அவ்வவ்விடம்‌ புக்கு அவ்வாயர்‌ பெண்டிர்க்கு அணுக்கனாய்‌ கொவ்வைக்‌ கனிவாய்‌ கொடுத்துக்‌ கூழைமை செய்யாமே எவ்வம்‌ சிலையுடை வேடர்‌ கானிடைக்‌ கன்றின்‌ பின்‌ தெய்வத்‌ தலைவனைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

239

மிடறுமெழும்‌ எழுத்தோட வெண்ணெய்‌ விழுங்கிப்‌ போய்‌ படிறு பல செய்து இப்பாடி எங்கும்‌ திரியாமே கடிறு பல திரி கானதரிடைக்‌ கன்றின்‌ பின்‌ இடற என்‌ பிள்ளையைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

240

வள்ளி நுடங்கிடை மாதர்‌ வந்து அலர்‌ தூற்றிட துள்ளி விளையாடித்‌ தோழரோடு திரியாமே கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்‌ கன்றின்‌ பின்‌ புள்ளின்‌ தலைவனைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

241

பன்னிரு திங்கள்‌ வயிற்றில்‌ கொண்ட அப்பாங்கினால்‌ என்‌ இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்‌ பொன்னடி நோவப்‌ புலரியே கானில்‌ கன்றின்‌ பின்‌ என்‌ இளஞ்சிங்கத்தைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

242

குடையும்‌ செருப்பும்‌ கொடாதே தாமோதரனை நான்‌ உடையும்‌ கடியன ஊன்று வெம்பரற்களுடை கடிய வெங்கானிடைக்‌ காலடி நோவக்‌ கன்றின்‌ பின்‌ கொடுயேன்‌ என்‌ பிள்ளையைப்‌ போக்கினேன்‌ எல்லே பாவமே

243

என்றும்‌ எனக்கு இனியானை என்‌ மணிவண்ணனை கன்றின்‌ பின்‌ போக்கினேன்‌ என்று அசோதை கழறிய பொன்‌ திகழ்‌ மாடப்‌ புதுவையர்கோன்‌ பட்டன்‌ சொல்‌ இன்‌ தமிழ்‌ மாலைகள்‌ வல்லவர்க்கு இடர்‌ இல்லையே