ஆற்றில் இருந்து விளையாடுவோங்களை சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்
2-10. ஆற்றிலிருந்து
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
ஆற்றில் நீராடும் பெண்கள் முறையிடும் பதிகம். சேற்றை வீசி, வளையையும் துகிலையும் எடுத்துக்கொண்டு, காற்றினும் விரைவாக ஓடி அகம் புகுந்து பதிலே தரமாட்டான் என்கிறார்கள். மரத்தின் மேல் ஏறிக்கொண்டு அவர்களை வேடிக்கை பார்க்கிறான். இளம் பிள்ளையாய்த் தளர்நடை இட்டு வந்து பேய்ச்சியின் உயிரை உண்டவனும், ஏனமாய் மண்ணைக் கோட்டால் இடந்தெடுத்தவனும் இவனே என்பதை ஆழ்வார் இடையிடையே நினைவுபடுத்துகிறார்.
பெரியாழ்வார் திருமொழி 2-10 ஆற்றிலிருந்து (ஆயர்மங்கையர் யசோதை பக்கல் கண்ணன் தீம்புகளைக் கூறி முறையிடூதல்)
குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ எண் திசையோரும் இறைஞ்சித் தொழுதேத்த வண்டமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்
தேனுகனாவி செகுத்து பனங்கனி தான் எறிந்திட்ட தடம்பெருந்தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்
ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பால் உண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த்தடந்தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டழுதானால் இன்று முற்றும்
தள்ளித் தளிர்நடை இட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தினுள்ளே அவளையுற நோக்கி ர கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர் துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற உண்டானால் இன்று முற்றும்
மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தாவென்று இரந்த இம்மண்ணினை ஓரடி இட்டு இரண்டாமடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும்
தாழை தண்ணாம்பல் தடம்பெரும் பொய்கைவாய் வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண் வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்
வானத்தெழுந்த மழை முகில் போல் எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடு ஏனத்துருவாய் இடந்த இம்மண்ணினை தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும்
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட அங்கவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல் இங்கிவை வல்லவர்க்கு ஏதம் ஒன்றில்லையே