நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார் கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும் மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே
திருக்குறுந்தாண்டகம்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
திருமங்கையாழ்வார் அருளிய இருபது பாசுரங்கள். "நிதியினை, பவளத் தூணை" என்று விலைமதிப்பற்ற உருவகங்களால் இறைவனை அழைத்துத் தொடங்குகிறார். குறுந்தாண்டகம் என்னும் யாப்பில் அமைந்த இந்நூல், பெரிய திருமொழியின் விரிவுக்குப் பின் ஒரு செறிவான தொகுப்பாக அமைகிறது. சொற்கள் குறைந்து, செறிவு கூடும் இடம் இது.
காற்றினைப் புனலைத் தீயைக் கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை இமயம் மேய எழில் மணித் திரளை இன்ப வாற்றினை அமுதம் தன்னை அவுணன் ஆருயிரை உண்ட கூற்றினை குணம் கொண்டு உள்ளம்! கூறு நீ கூறுமாறே
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க் காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே
கேட்க யான் உற்றதுண்டு கேழலாய் உலகம் கொண்ட பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே
இரும்பு அனன்றுண்ட நீர் போல் எம்பெருமானுக்கு என் தன் அரும் பெறல் அன்பு புக்கிட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன் வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து கரும்பின் இன்சாறு போலப் பருகினேற்கு இனியவாறே
மூவரில் முதல்வனாய ஒருவனை உலகம் கொண்ட கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை அமரர் சென்னிப் பூவினை புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே?
இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையானை தன்மையை நினைவார் என்தன் தலை மிசை மன்னுவாரே
வானிடைப் புயலை மாலை வரை இடைப் பிரசம் ஈன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் ர மானிடப் பிறவி அந்தோ! மதிக்கிலர் கொள்க தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே
உள்ளமோ ஒன்றி!! நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால் என்தன் உள்ளம் தெள்ளியீர்! தேவர்க்கெல்லாம் தேவராய் உலகம் கொண்ட ஒள்ளியீர்! உம்மை அல்லால் எழுமையும் துணையிலோமே
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன்? பத்திமைக்கு அன்புடையேன் ஆவதே? பணியாய் எந்தாய்! முத்தொளி மரகதமே! முழங்கொளி முகில் வண்ணா! என் அத்த! நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே
தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே? பணியாய் எந்தாய்! அண்டமாய் எண்திசைக்கும் ஆதியாய்! நீதியான பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே
ஆவியை அரங்க மாலை அழுக்குடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் பாவியேன் பிழைத்தவாறென்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே
இரும்பு அனன்றுண்ட நீரும் போதரும் கொள்க என்தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணிணை களிக்குமாறே!
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும் பாவியேனாக எண்ணி அதனுள்ளே பழுத்தொழிந்தேன் தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே
முன் பொலா! இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டூவன் அடியனேனே 15 ஒன்றில் (5 திருமஞ்சன காலத்தில் சேவிக்கப்படுவது
மாய மான்! மாயச் செற்று மருதிற நடந்து வையம் தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும் தூய மா மாலை கொண்டு சூட்டூவன் தொண்டனேனே
பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி ஏசினார் உய்ந்து போனார் என்பது இவ்வுலகின் வண்ணம் பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு ஆசையோ பெரிது கொள்க அலை கடல் வண்ணர் பாலே
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையைக் காண்கிற்பாரே
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரிதந்து உண்ணும் முண்டியான்! சாபம் தீர்த்த ஒருவன் ஊர் ர உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே?
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை ர மானவேல் கலியன் சொன்ன வண்தமிழ் மாலை நாலைந்தும் ஊனமதின்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே
அடிவரவு: நிதியினை காற்றினை பாயிரும் கேட்க இரும்பு மூவரில் இஇம்மையை வானிடை உள்ளம் சித்தம் தொண்டு ஆவியை இரும்பு காவியை முன்பொலா மாயம் பேசினார் இளைப்பினை பிண்டியார் வானவர் மின் திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்