Skip to the text
பெரிய திருமொழி

11-7. நீள்நாகம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

நீண்ட நாகத்தைச் சுற்றி, நெடுமலையை நட்டு, ஆழ்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட பெருமானைப் பாடும் பதிகம். மலையை மத்தாகவும் பாம்பைக் கயிறாகவும் ஆக்கிய அச்செயலின் அளவை ஆழ்வார் வியக்கிறார். பிறர் பொருட்டு அவன் எடுத்துக்கொண்ட உழைப்பே இங்கும் மையம்.

பெரிய திருமொழி 11-7 - நீள்நாகம்‌ (எம்பெருமான்‌ திறத்தில்‌ ஈடுபடாத அவயங்கள்‌ பயனற்றன' என்று கூறல்‌)

2012

நீள்நாகம்‌ சுற்றி நெடுவரை நட்டு ஆழ்கடலைப்‌ பேணான்‌ கடைந்து அமுதம்‌ கொண்டு உகந்த பெம்மானை பூணார மார்வனைப்‌ புள்ளூரும்‌ பொன்மலையை காணாதார்‌ கண்‌ என்றும்‌ கண்ணல்ல கண்டாமே

2013

நீள்வான்‌ குறள்‌ உருவாய்‌ நின்றிரந்து மாவலி மண்‌ தாளால்‌ அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மாமணியைத்‌ தொண்டர்க்கு இனியானை கேளாச்‌ செவிகள்‌ செவி அல்ல கேட்டாமே

2014

தூயானைத்‌ தூய மறையானை தென்னாலி மேயானை மேவாள்‌ உயிருண்டு அழுதுண்ட வாயானை மாலை வணங்கி அவன்‌ பெருமை பேசாதார்‌ பேச்சென்றும்‌ பேச்சல்ல கேட்டாமே

2015

கூடா இரணியனைக்‌ கூருகிரால்‌ மார்விடந்த ஓடா அடலரியை உம்பரார்‌ கோமனை ர தோடார்‌ நறுந்துழாய்‌ மார்வனை ஆர்வத்தால்‌ பாடாதார்‌ பாட்டென்றும்‌ பாட்டல்ல கேட்டாமே

2016

மையார்‌ கடலும்‌ மணிவரையும்‌ மாமுகிலும்‌ கொய்யார்‌ குவளையும்‌ காயாவும்‌ போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச்‌ சங்கேந்தும்‌ கையானை கைதொழாக்‌ கையல்ல கண்டாமே

2017

கள்ளார்‌ துழாயும்‌ கணவலரும்‌ கூவிளையும்‌ முள்ளார்‌ முளரியும்‌ ஆம்பலும்‌ முன்‌ கண்டக்கால்‌ புள்ளாய்‌ ஓர்‌ ஏனமாய்ப்‌ புக்கிடந்தான்‌ பொன்னடிக்கு என்று உள்ளாதார்‌ உள்ளத்தை உள்ளமாக்‌ கொள்ளோமே

2018

கனையார்‌ கடலும்‌ கருவிளையும்‌ காயாவும்‌ அனையானை அன்பினால்‌ ஆர்வத்தால்‌ என்றும்‌ சுனையார்‌ மலரிட்டூத்‌ தொண்டராய்‌ நின்று நினையாதார்‌ நெஞ்சு என்றும்‌ நெஞ்சல்ல கண்டாமே

2019

வெறியார்‌ கருங்கூந்தல்‌ ஆய்ச்சியர்‌ வைத்த உறியார்‌ நறுவெண்ணெய்‌ தான்‌ உகந்து உண்ட சிறியானை செங்கணெடியானைச்‌ சிந்தித்து அறியாதார்‌ என்றும்‌ அறியாதார்‌ கண்டாமே

2020

தேனோடு வண்டாலும்‌ திருமாலிருஞ்சோலை தான்‌ இடமாக்‌ கொண்டான்‌ தடமலர்க்‌ கண்ணிக்காய்‌ ஆன்விடையேழ்‌ அன்றடர்த்தாற்கு ஆளானார்‌ அல்லாதார்‌ மானிடவர்‌ அல்லர்‌ என்று என்‌ மனத்தே வைத்தேனே

2021

மெய்ந்நின்ற பாவம்‌ அகல திருமாலைக்‌ கைந்நின்ற ஆழியான்‌ சூழும்‌ கழல்‌ சூடி கைந்நின்ற வேற்கைக்‌ கலியன்‌ ஒலிமாலை ஐயொன்றும்‌ ஐந்தும்‌ இவை பாடி ஆடுமினே

அடிவரவு: நீள்நாகம்‌ நீள்வான்‌ தூயான்‌ கூடா மையார்‌ கள்ளார்‌ கனை வெறி தேனொடு மெய்‌ மாற்றம்‌