Skip to the text
பெரிய திருமொழி

11-2. குன்றமெடுத்து

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

குன்றத்தைத் தூக்கி மழை தடுத்தவன், இளையாருடன் மன்றத்தில் குரவைக் கூத்து ஆடியதையும் சேர்த்துச் சொல்லும் பதிகம். காத்த அதே கைகள் ஆடலிலும் இணைகின்றன. வீரமும் விளையாட்டும் ஒரே இரவில் அடுத்தடுத்து நிகழ்வதை ஆழ்வார் ரசிக்கிறார்.

பெரிய திருமொழி 11-32 - குன்றமெடுத்து (தலைவி பிறிவாற்றாது வருந்திக்‌ கூறும்‌ பாசுரம்‌)

1962

குன்றம்‌ எடுத்து மழை தடுத்து இளையாரொடும்‌ மன்றில்‌ குரவை பிணைந்த மால்‌ என்னை மால்‌ செய்தான்‌ முன்றில்‌ தனி நின்ற பெண்ணை மேல்‌ கிடந்தீர்கின்ற அன்றிலின்‌ கூட்டைப்‌ பிரிக்க கிற்பவர்‌ ஆர்‌ கொலோ?

1963

பூங்குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரிமாச்‌ செகுத்து ஆங்கு வேழத்தின்‌ கொம்பு கொண்டு வன்பேய்‌ முலை வாங்கி உண்ட அவ்வாயன்‌ நிற்க இவ்வாயன்‌ வாய்‌ ஏங்கு வேய்ங்குழல்‌ என்னோடு ஆடும்‌ இளமையே

1964

மல்லொடு கஞ்சனும்‌ துஞ்ச வென்ற மணிவண்ணன்‌ அல்லிமலர்த்‌ தண்துழாய்‌ நினைந்திருந்தேனையே எல்லியில்‌ மாருதம்‌ வந்தடும்‌ அதுவன்றியும்‌ கொல்லை வல்லேற்றின்‌ மணியும்‌ கோயின்மை செய்யுமே

1965

பொருந்து மாமரம்‌ ஏழும்‌ எய்த புனிதனார்‌ திருந்து சேவடி என்‌ மனத்து நினைதொறும்‌ கருந்தண்‌ மாகடல்‌ கங்குல்‌ ஆர்க்கும்‌ அதுவன்றியும்‌ வருந்த வாடை வரும்‌ இதற்கு இனி என்‌ செய்கேன்‌?

1966

அன்னை முனிவதும்‌ அன்றிலின்‌ குரல்‌ ஈர்வதும்‌ மன்னு மறிகடல்‌ ஆர்ப்பதும்‌ வளை சோர்வதும்‌ பொன்னங்கலை அல்குல்‌ அன்ன மென்னடைப்‌ பூங்குழல்‌ பின்னை மணாளர்‌ திறத்தமாயின பின்னையே

1967

ஆழியும்‌ சங்கும்‌ உடைய நங்கள்‌ அடிகள்‌ தாம்‌ பாழிமையான கனவில்‌ நம்மைப்‌ பகர்வித்தார்‌ தோழியும்‌ நானும்‌ ஒழிய வையம்‌ துயின்றது கோழியும்‌ கூகின்றதில்லை கூரிருள்‌ ஆயிற்றே!

1968

காமன்‌ தனக்கு முறை அல்லேன்‌ கடல்‌ வண்ணனார்‌ மாமணவாளர்‌ எனக்குத்‌ தானும்‌ மகன்‌ சொல்லில்‌ யாமங்கள்‌ தோறு எரி வீசும்‌ என்னிளம்‌ கொங்கைகள்‌ மாமணி வண்ணர்‌ திறத்தவாய்‌ வளர்கின்றவே

1969

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்‌ நெஞ்சம்‌ நிறை கொண்டு போயினார்‌ நினைகின்றிலர்‌ வெஞ்சுடர்‌ போய்‌ விடியாமல்‌ எவ்விடம்‌ புக்கதோ! நஞ்சு உடலம்‌ துயின்றால்‌ நமக்கு இனி நல்லதே

1970

காமன்‌ கணைக்கு ஓர்‌ இலக்கமாய்‌ நலத்தின்‌ மிகு பூமரு கோல நம்‌ பெண்மை சிந்தித்திராது போய்‌ தூமலர்‌ நீர்கொடு தோழி! நாம்‌ தொழுது ஏத்தினால்‌ கார்முகில்‌ வண்ணரைக்‌ கண்களால்‌ காணலாம்‌ கொலோ?

1971

வென்றி விடையுடன்‌ ஏழடர்த்த அடிகளை மன்றில்‌ மலிபுகழ்‌ மங்கைமன்‌ கலிகன்றி சொல்‌ ஒன்று நின்ற ஒன்பதும்‌ உரைப்பவர்‌ தங்கள்‌ மேல்‌ என்றும்‌ நில்லா வினை ஒன்றும்‌ சொல்லில்‌ உலகிலே

அடிவரவு: குன்றம்‌ பூ மல்லொடு பொருந்து அன்னை ஆழி காமன்தனக்கு மஞ்சுறு காமன்கணைக்கு வென்றி மன்னிலங்கு