Skip to the text
பெரிய திருமொழி

10-9. புள்ளுருவாகி

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

பறவை வடிவில் நள்ளிருளில் வந்த பூதனை மாள்வதற்கும், இலங்கை நெருப்பில் எரிவதற்கும் காரணமான ஊக்கத்தைப் பாடும் பதிகம். இரண்டும் ஒரே உறுதியின் வெளிப்பாடுகள் — தீங்கு நிற்க வேண்டும் என்பது. அளவின் வேறுபாடு அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.

பெரிய திருமொழி 10-9 - புள்ளுருவாகி (க்ருஷ்ணாவதாரத்தில்‌ ஈடுபாடு 6 - தலைவியின்‌ ஆற்றாமைக்குத்‌ தாய்‌ இரங்கித்‌ தலைவனை வேண்டும்‌ பாசுரம்‌)

1932

புள்ளுருவாகி நள்ளிருள்‌ வந்த பூதனை மாள இலங்கை ஒள்ளெரி மண்டி உண்ணப்‌ பணித்த ஊக்கமதனை நினைந்தோ? கள்ளவிழ்‌ கோதை காதலும்‌ எங்கள்‌ காரிகை மாதர்‌ கருத்தும்‌ பிள்ளை தன்‌ கையில்‌ கிண்ணமே ஒக்கப்‌ பேசுவது எந்தை பிரானே!

1933

மன்றில்‌ மலிந்து கூத்து வந்தாடி மால்விடை ஏழும்‌ அடர்த்து ஆயர்‌ அன்று நடூங்க ஆநிரை காத்த ஆண்மை கொலோ? அறியேன்‌ நான்‌ நின்ற பிரானே! நீள்கடல்‌ வண்ணா! நீ இவள்‌ தன்னை நின்‌ கோயில்‌ முன்றில்‌ எழுந்த முருங்கையில்‌ தேனா முன்‌ கைவளை கவர்ந்தாயே

1934

ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல்‌ மிகுத்துக்‌ கார்முகில்‌ வண்ணா! கஞ்சனை முன்னம்‌ கடந்த நின்‌ கடுந்திறல்‌ தானோ? நேரிழை மாதை நித்திலத்தொத்தை நெடூங்கடல்‌ அமுதனையாளை ஆரெழில்‌ வண்ணா! அங்கையில்‌ வட்டாம்‌ இவள்‌ எனக்‌ கருதுகின்றாயே

1935

மல்கிய தோளும்‌ மானுரியதளும்‌ உடையவர்‌ தமக்கும்‌ ஓர்‌ பாகம்‌ நல்கிய நலமோ? நரகனைத்‌ தொலைத்த கரதலத்தமைதியின்‌ கருத்தோ? அல்லியங்கோதை அணிநிறம்‌ கொண்டு வந்து முன்னே நின்று போகாய்‌ சொல்லி என்‌? நம்பீ! இவளை நீ உங்கள்‌ தொண்டர்‌ கைத்தண்டென்றவாறே

1936

செரு அழியாத மன்னர்கள்‌ மாளத்‌ தேர்‌ வலங்கொண்டு அவர்‌ செல்லும்‌ அருவழி வானம்‌ அதர்படக்‌ கண்ட ஆண்மை கொலோ? அறியேன்‌ நான்‌ திருமொழி எங்கள்‌ தேமலர்க்‌ கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ! பெருவழி நாவற்கனியினும்‌ எளியள்‌ இவள்‌ எனப்‌ பேசுகின்றாயே

1937

அரக்கியராகம்‌ புல்லென வில்லால்‌ அணிமதிள்‌ இலங்கையார்‌ கோனை செருக்கழித்து அமரர்‌ பணிய முன்னின்ற சேவகமோ? செய்ததின்று முருக்கிதழ்வாய்ச்சி முன்கை வெண்சங்கம்‌ கொண்டு முன்னே நின்று போகாய்‌ எருக்கிலைக்காக எறிமழுவோச்சல்‌ என்‌ செய்வது? எந்தை பிரானே!

1938

ஆழியந்திண்தேர்‌ அரசர்‌ வந்திறைஞ்ச அலைகடல்‌ உலகம்‌ முன்னாண்ட பாழியந்தோளோர்‌ ஆயிரம்‌ வீழப்‌ படை மழுப்‌ பற்றிய வலியோ? மாழை மென்னோக்கி மணி நிறம்‌ கொண்டு வந்து முன்னே நின்று போகாய்‌ கோழி வெண்முட்டைக்கு என்‌ செய்வது? எந்தாய்‌! குறுந்தடி நெடூுங்கடல்‌ வண்ணா!

1939

பொருந்தலன்‌ ஆகம்‌ புள்ளு வந்தேற வள்ளுகிரால்‌ பிளந்து அன்று பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ? செய்ததின்று பெருந்தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்‌ கருங்கடல்‌ வண்ணா! கவுள்‌ கொண்ட நீராம்‌ இவள்‌ எனக்‌ கருதுகின்றாயே

1940

நீர்‌ அழல்‌ வானாய்‌ நெடுநிலம்‌ காலாய்‌ நின்ற நின்‌ நீர்மையை நினைந்தோ? சீர்கெழு கோதை என்னலதிலள்‌ என்று அன்னதோர்‌ தேற்றன்மை தானோ? பார்கெழு பவ்வத்தார்‌ அமுதனைய பாவையைப்‌ பாவம்‌ செய்தேனுக்கு ஆரழல்‌ ஓம்பும்‌ அந்தணன்‌ தோட்டமாக நின்‌ மனத்து வைத்தாயே

1941

வேட்டத்தைக்‌ கருதாது அடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை வாள்‌ திறல்‌ தானை மங்கையர்‌ தலைவன்‌ மானவேல்‌ கலியன்‌ வாயொலிகள்‌ தோட்டலர்‌ பைந்தார்ச்‌ சுடர்‌ முடியானைப்‌ பழமொழியால்‌ பணிந்துரைத்த பாட்டிவை பாடப்‌ பத்திமை பெருகிச்‌ சித்தமும்‌ திருவொடு மிகுமே

அடிவரவு: புள்‌ மன்றில்‌ ஆர்‌ மல்கிய செரு அரக்கியர்‌ ஆழி பொருந்தலன்‌ நீர்‌ வேட்டத்தை திருத்தாய்‌