Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

2-7. ஆனிரை

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

"ஆநிரை மேய்க்க நீ போகிறாய்" — கன்றுகளை மேய்க்கக் காடு செல்லும் மகனைக் குறித்த தாயின் கவலை. காடெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாடுமே; நீ எமக்கு அரிய மருந்து என்பதை அறியாய் என்கிறாள். எருதுகளோடு பொருதுவது, கஞ்சனைக் காலால் பாய்ந்தது என அவனது துணிச்சலையும் சொல்லி அஞ்சுகிறாள். ஆலிலையில் ஏழுலகையும் உண்டு துயின்றவனை ஒரு தாய் காட்டுக்கு அனுப்பக் கூசுவது இப்பதிகத்தின் சுவை.

பெரியாழ்வார்‌ திருமொழி 2-7 ஆனிரை (கண்ணனைப்‌ பூச்சூட அழைத்தல்‌)

182

ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய்‌ கானகம்‌ எல்லாம்‌ திரிந்து உன்‌ கரிய திருமேனி வாட பானையில்‌ பாலைப்‌ பருகிப்‌ பற்றாதார்‌ எல்லாம்‌ சிரிப்ப தேனில்‌ இனிய பிரானே செண்பகப்‌ பூச்சூட்ட வாராய்‌

183

கருவுடை மேகங்கள்‌ கண்டால்‌ உன்னைக்‌ கண்டால்‌ ஒக்கும்‌ கண்கள்‌ உருவுடையாய்‌ உலகேழும்‌ உண்டாக வந்து பிறந்தாய்‌ திருவுடையாள்‌ மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்‌ மருவி மணம்‌ கமழ்கின்ற மல்லிகைப்‌ பூச்சூட்ட வாராய்‌

184

மச்சொடு மாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்கு கச்சொடு பட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலும்‌ தீமைகள்‌ செய்வாய்‌ நீள்‌ திருவேங்கடத்து எந்தாய்‌ பச்சைத்‌ தமனகத்தோடு பாதிரிப்‌ பூச்சூட்ட வாராய்‌

185

தெருவின்கண்‌ நின்று இளவாய்ச்சிமார்களைத்‌ தீமை செய்யாதே மருவும்‌ தமனகமும்‌ சீர்‌ மாலை மணம்‌ கமழ்கின்ற புருவம்‌ கருங்குழல்‌ நெற்றி பொலிந்த முகிற்‌ கன்று போலே உருவம்‌ அழகிய நம்பீ உகந்திவை சூட்ட நீ வாராய்‌ (க)

186

புள்ளினை வாய்‌ பிளந்திட்டாய்‌ பொருகரியின்‌ கொம்பு ஒசித்தாய்‌ கள்ளவரக்கியை மூக்கொடு காவலனைத்‌ தலை கொண்டாய்‌ அள்ளி நீ வெண்ணெய்‌ விழுங்க அஞ்சாது அடியேன்‌ அடித்தேன்‌ தெள்ளிய நீரில்‌ எழுந்த செங்கழுநீர்‌ சூட்ட வாராய்‌

187

எருதுகளோடு பொருதி ஏதும்‌ உலோபாய்‌ காண்‌ நம்பி கருதிய தீமைகள்‌ செய்து கஞ்சனைக்‌ கால்கொடு பாய்ந்தாய்‌ தெருவின்கண்‌ தீமைகள்‌ செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப்‌ பூச்சூட்ட வாராய்‌

188

குடங்கள்‌ எடுத்தேற விட்டுக்‌ கூத்தாட வல்ல எம்‌ கோவே மடங்கொள்‌ மதிமுகத்தாரை மால்செய்ய வல்ல என்‌ மைந்தா இடந்திட்டு இரணியன்‌ நெஞ்சை இருபிளவாக முன்‌ கீண்டாய்‌ குடந்தைக்‌ கிடந்த எம்‌ கோவே குருக்கத்திப்‌ பூச்சூட்ட வாராய்‌

189

சீமாலிகன்‌ அவனோடு தோழமை கொள்ளவும்‌ வல்லாய்‌ சாமாறு அவனை நீ எண்ணிச்‌ சக்கரத்தால்‌ தலை கொண்டாய்‌ ஆமாறறியும்‌ பிரானே அணியரங்கத்தே கிடந்தாய்‌ ஏமாற்றம்‌ என்னைத்‌ தவிர்த்தாய்‌ இருவாட்சிப்‌ பூச்சூட்ட வாராய்‌

190

அண்டத்தமரர்கள்‌ சூழ அத்தாணியுள்‌ அங்கிருந்தாய்‌ தொண்டர்கள்‌ நெஞ்சில்‌ உறைவாய்‌ தூமலராள்‌ மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும்‌ ஓராலிலையில்‌ துயில்‌ கொண்டாய்‌ கண்டு நான்‌ உன்னை உகக்கக்‌ கருமுகைப்‌ பூச்சூட்ட வாராய்‌

191

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர்‌ இருவாட்சி எண்பகர்‌ பூவும்‌ கொணர்ந்தேன்‌ இன்று இவை சூட்ட வாவென்று மண்பகர்‌ கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை பண்பகர்‌ வில்லிபுத்தூர்க்‌ கோன்‌ பட்டர்பிரான்‌ சொன்ன பத்தே