தவள இளம்பிறை துள்ளு முந்நீர்த் தண்மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித் துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார் என்னலமைந்து முன் கொண்டு போன குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
9-5. தவளவிளம்பிறை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
இளம்பிறையும், கடலும், தண்மலர்த் தென்றலும், அன்றிலும் ஒன்றுசேர்ந்து தன் நெஞ்சத்தைத் துவளச் செய்வதாகச் சொல்லும் பதிகம். அழகான ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக வலியாக மாறுவதை ஆழ்வார் வரிசைப்படுத்துகிறார். உலகம் அழகாக இருப்பதே சில நேரங்களில் தாங்க முடியாததாகிறது.
பெரிய திருமொழி 9-5 - தவளவிளம்பிறை (திருக்குறுங்குடி 1 - தலைவி தனது தலைமகன் உள்ள இடத்தில் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டிக் கூறிய பாசுரம்)
தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண்மதியின் இள வாடை இன்னே ஊதை திரிதந்துழறி உண்ண ஓரிரவும் உறங்கேன் உறங்கும் பேதையர் பேதைமையால் இருந்து பேசிலும் பேசுக பெய்வளையார் கோதை நறுமலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
காலையும் மாலையொத்துண்டு கங்குல் நாழிகை ஊழியில் நீண்டூலாவும் போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே ஒக்கும் வாடை சொல்லில் மாலவன் மாமணிவண்ணன் மாயம் மற்றுமுள அவை வந்திடா மூன் கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
கருமணி பூண்டு வெண்ணாகணைந்து காரிமிலேற்றணர் தாழ்ந்துலாவும் ஒருமணி ஓசை என்னுள்ளம் தள்ள ஓரிரவும் உறங்காதிருப்பேன் பெருமணி வானவர் உச்சி வைத்த பேரருளாளன் பெருமை பேசி! ச குருமணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
திண்திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழல் ஓசையும் தென்றலோடு கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி பண்டையவல்ல இவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
எல்லியும் நன்பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார் நல்லரவர் திறம் நாமறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கில்லை வல்லன சொல்லி மகிழ்வரேலும் மாமணி வண்ணரை நாம் மறவோம் கொல்லை வளரிள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ? என்று சொன்ன பின்னை ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடாடும் அதனை அறிய மாட்டேன் கொங்கலர் தண்பணை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
கேவலமன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டூு ஏவலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
சோத்தென நின்று தொழ இரங்கான் தொன்னலம் கொண்டெனக்கு இன்று தாறும்!' போர்ப்பதோர் பொற்படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவர் பிரான் திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமருசீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்றுலகாளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடூமின்
அடிவரவு: தவளம் தாதவிழ் காலை கருமணி திண்திமில் எல்லி செங்கண் கேவலம் சோத்தென செற்றவன் அக்கு