Skip to the text
பெரிய திருமொழி

8-9. கைம்மானம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

மதயானையின் இடரைத் தீர்த்த கருமுகிலை, மணியை, மரகதத்தை "எம்மான், எம்பிரான்" என்று அழைக்கும் பதிகம். ஒரு விலங்கின் துயரைத் தீர்த்ததையே அவனை அடையாளம் காணும் அடையாளமாக ஆழ்வார் எடுத்துக்கொள்கிறார். செய்த பெருஞ்செயல்களில் இதுவே நினைவில் நிற்கிறது.

பெரிய திருமொழி 8-9 - கைம்மானம்‌ (திருக்கண்ணபுரம்‌ 9)

1728

கைம்மான மத யானை இடர்‌ தீர்த்த கருமுகிலை மைம்மான மணியை அணிகொள்‌ மரதகத்தை எம்மானை எம்பிரானை ஈசனை என்‌ மனத்துள்‌ அம்மானை அடியேன்‌ அடைந்து உய்ந்து போனேனே

1729

தருமான மழை முகிலைப்‌ பிரியாது தன்னடைந்தார்‌ வருமானம்‌ தவிர்க்கும்‌ மணியை அணியுருவில்‌ திருமாலை அம்மானை அமுதத்தைக்‌ கடல்‌ கிடந்த பெருமானை அடியேன்‌ அடைந்து உய்ந்து பிழைத்தேனே

1730

விடை ஏழ்‌ அன்றடர்த்து வெகுண்டு விலங்கலுற படையால்‌ ஆழி தட்ட பரமன்‌ பரஞ்சோதி மடையார்‌ நீலம்‌ மல்கும்‌ வயல்‌ சூழ்‌ கண்ணபுரம்‌ ஒன்று உடையானுக்கு அடியேன்‌ ஒருவர்க்கு உரியேனோ?

1731

மிக்கானை மறையாய்‌ விரிந்த விளக்கை என்னுள்‌ புக்கானைப்‌ புகழ்‌ சேர்‌ பொலிகின்ற பொன்‌ மலையை தக்கானைக்‌ கடிகைத்‌ தடங்குன்றின்‌ மிசை இருந்த அக்காரக்கனியை அடைந்து உய்ந்து போனேனே

1732

வந்தாய்‌ என்‌ மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய்‌! போய்‌ அறியாய்‌ இதுவே அமையாதோ கொந்தார்‌ பைம்பொழில்‌ சூழ்‌ குடந்தைக்‌ கிடந்து உகந்த மைந்தா! உன்னை என்றும்‌ மறவாமைப்‌ பெற்றேனே

1733

எஞ்சா வெந்நரகத்து அழுந்தி நடூங்குகின்றேற்கு அஞ்சேல்‌ என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை நெஞ்சே! நீ நினையாது இறைப்‌ பொழுதும்‌ இருத்தி கண்டாய்‌ மஞ்சார்‌ மாளிகை சூழ்‌ வயலாலி மைந்தனையே

1734

பெற்றார்‌ பெற்றொழிந்தார்‌ பின்னும்‌ நின்று அடியேனுக்கு உற்றானாய்‌ வளர்த்து என்‌ உயிராகி நின்றானை முற்றா மாமதி கோள்‌ விடுத்தானை எம்மானை எத்தால்‌ யான்‌ மறக்கேன்‌? இது சொல்‌ என்‌ ஏழை நெஞ்சே!

1735

கற்றார்‌ பற்றறுக்கும்‌ பிறவிப்‌ பெருங்கடலே பற்றா வந்து அடியேன்‌ பிறந்தேன்‌ பிறந்த பின்னை வற்றா நீர்வயல்‌ சூழ்‌ வயலாலி அம்மானைப்‌ பெற்றேன்‌ பெற்றதுவும்‌ பிறவாமைப்‌ பெற்றேனே

1736

கண்ணார்‌ கண்ணபுரம்‌ கடிகை கடி கமழும்‌ தண்ணார்‌ தாமரை சூழ்‌ தலைச்சங்க மேல்‌ திசையுள்‌ விண்ணோர்‌ நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக்‌ கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ?

1737

செருநீர வேல்‌ வலவன்‌ கலிகன்றி மங்கையர்‌ கோன்‌ கருநீர்‌ முகில்‌ வண்ணன்‌ கண்ணபுரத்தானை இருநீர்‌ இன்தமிழ்‌ இன்னிசை மாலைகள்‌ கொண்டு தொண்டீர்‌! வருநீர்‌ வையம்‌ உய்ய இவை பாடி ஆடூுமினே

அடிவரவு: கைம்மானம்‌ தரு விடை மிக்கானை வந்தாய்‌ எஞ்சா பெற்றார்‌ கற்றார்‌ கண்ணார்‌ செரு வண்டார்‌