Skip to the text
பெரிய திருமொழி

8-4. விண்ணவர்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

விண்ணவர்களின் பெருமானாகவும், மண்ணுலகத்தார் அனைவரும் வணங்குபவனாகவும் இருக்கும் கண்ணபுரத்தானைப் பாடும் பதிகம். மேலுலகிலும் இவ்வுலகிலும் ஒரே இறைவனே வணங்கப்படுகிறான் என்பதை ஆழ்வார் இணைத்துச் சொல்கிறார். திருமார்பில் திருமகள் விளங்கும் கோலமே அவனது அடையாளம்.

பெரிய திருமொழி 8-4 - விண்ணவர்‌ (திருக்கண்ணபுரம்‌ 4 - தலைமகனிடத்து ஈடுபட்ட தலைவி ஆற்றாது தும்பியை நோக்கிக்‌ கூறிய பாசுரம்‌)

1678

விண்ணவர்‌ தங்கள்‌ பெருமான்‌ திருமார்வன்‌ மண்ணவர்‌ எல்லாம்‌ வணங்கும்‌ மலிபுகழ்‌ சேர்‌ கண்ணபுரத்து எம்பெருமான்‌ கதிர்‌ முடி மேல்‌ வண்ண நறுந்துழாய்‌ வந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1679

வேத முதல்வன்‌ விளங்கு புரிநூலன்‌ பாதம்‌ பரவிப்‌ பலரும்‌ பணிந்தேத்தி காதன்மை செய்யும்‌ கண்ணபுரத்து எம்பெருமான்‌ தூது நறுந்துழாய்‌ தாழ்ந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1680

விண்ட மலர்‌ எல்லாம்‌ ஊதி நீ என்‌ பெறுதி? அண்ட முதல்வன்‌ அமரர்கள்‌ எல்லாரும்‌ கண்டு வணங்கும்‌ கண்ணபுரத்து எம்பெருமான்‌ வண்டு நறுந்துழாய்‌ வந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1681

நீர்‌ மலிகின்றதோர்‌ மீனாய்‌ ஓர்‌ ஆமையுமாய்‌ சீர்‌ மலிகின்றதோர்‌ சிங்க உருவாகி கார்‌ மலி வண்ணன்‌ கண்ணபுரத்து எம்பெருமான்‌ தார்‌ மலி தண்துழாய்‌ தாழ்ந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1682

ஏரார்‌ மலர்‌ எல்லாம்‌ ஊதி நீ என்‌ பெறுதி? பாரார்‌ உலகம்‌ பரவப்‌ பெருங்கடலுள்‌ கார்‌ ஆமையான கண்ணபுரத்து எம்பெருமான்‌ தாரார்‌ நறுந்துழாய்‌ தாழ்ந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1683

மார்வில்‌ திருவன்‌ வலனேந்து சக்கரத்தன்‌ பாரைப்‌ பிளந்த பரமன்‌ பரஞ்சோதி காரில்‌ திகழ்‌ காயா வண்ணன்‌ கதிர்‌ முடி மேல்‌ தாரில்‌ நறுந்துழாய்‌ தாழ்ந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1684

வாமனன்‌ கற்கி மதுசூதன்‌ மாதவன்‌ தார்‌ மன்னு தாசரதியாய தடமார்வன்‌ காமன்‌ தன்‌ தாதை கண்ணபுரத்து எம்பெருமான்‌ தாம நறுந்துழாய்‌ தாழ்ந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

1685

நீல மலர்கள்‌ நெடூநீர்‌ வயல்‌ மருங்கில்‌ சால மலர்‌ எல்லாம்‌ ஊதாதே வாளரக்கர்‌ காலன்‌ கண்ணபுரத்து எம்பெருமான்‌ கதிர்‌ முடி மேல்‌ கோல நறுந்துழாய்‌ கொண்டூதாய்‌ கோல்‌ தும்பீ!

1686

நந்தன்‌ மதலை நிலமங்கை நல்துணைவன்‌ அந்த முதல்வன்‌ அமரர்கள்‌ தம்‌ பெருமான்‌ கந்தம்‌ கமழ்‌ காயா வண்ணன்‌ கதிர்‌ முடி மேல்‌ கொந்து நறுந்துழாய்‌ கொண்டூதாய்‌ கோல்‌ தும்பி!

1687

வண்டமரும்‌ சோலை வயலாலி நல்நாடன்‌ கண்ட சீர்‌ வென்றிக்‌ கலியன்‌ ஒலி மாலை கொண்டல்‌ நிறவண்ணன்‌ கண்ணபுரத்தானை தொண்டரோம்‌ பாட நினைந்தூதாய்‌ கோல்‌ தும்பீ!

அடிவரவு: விண்ணவர்‌ வேதம்‌ விண்ட நீர்‌ ஏரார்‌ மார்வில்‌ வாமனன்‌ நீலம்‌ நந்தன்‌ வண்டமரும்‌ தந்தை