கரை எடுத்த சுரிசங்கும் கனபவளத்து எழுகொடுயும் திரை எடுத்து வருபுனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரிவளையே
8-3. கரையெடூத்த
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
கரையில் ஒதுங்கிய சுரிசங்கும் பவளக் கொடிகளும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் திருக்கண்ணபுரத்தைப் பாடும் பதிகம். கடல் தானே கொணர்ந்து குவிக்கும் செல்வத்தால் அத்தலத்தின் வளத்தை ஆழ்வார் சொல்கிறார். இயற்கையே அவ்வூருக்குக் காணிக்கை செலுத்துவதுபோலத் தோன்றுகிறது.
பெரிய திருமொழி 8-3 - கரையெடூத்த (திருக்கண்ணபுரம் 3 - தலைமகனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறிய பாசுரம்; அறத்தொடு நிற்றல்)
அரிவிரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் தெரிவரிய மணிமாடத் திருக்கண்ணபுரத்து உறையும் வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறுதறுகண் கரி வெருவ மருப்பொசித்தாற்கு இழந்தேன் என் கனவளையே
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகை போம் திங்கள் மாமுகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் பைங்கண்மால் விடை அடர்த்துப் பனிமதி கோள் விடுத்துகந்த செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறிவளையே
கணமருவு மயில் அகவு கடிபொழில் சூழ் நெரடுமறுகில் திணமருவு கனமதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் மணமருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும் புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன்வளையே
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய்தொழில்கள் தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரிவளையே
மடல் எடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர் பவளம் திடல் எடுத்துச் சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் அடல் அடர்த்து அன்று இரணியனை முரணழிய அணியுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளிவளையே
வண்டமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணிழுத்தம் தெண்திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் எண்திசையும் எழு சுடரும்! இருநிலனும் பெருவிசும்பும் உண்டுமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளிவளையே
கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறிவளையே
வாராளும் இளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன் திருக்கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிரவாய் அரவணை மேல் பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய்வளையே
தேமருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் வாமனனை மறிகடல் சூழ் வயலாலி வளநாடன் காமருசீர்க் கலிகன்றி கண்டூரைத்த தமிழ் மாலை நாமருவி இவை பாட வினையாய நண்ணாவே
அடிவரவு: கரை அரி துங்கம் கணம் வாய் மடல் வண்டு கொங்கு கடலும் வாராளும் தேமருவு விண்ணவர்