சிலை இலங்கு பொன்னாழி திண் படை தண்டு ஒண்சங்கம் என்கின்றாளால் மலை இலங்கு தோள் நான்கே மற்றவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் முலை இலங்கு பூம்பயலை முன்போட அன்போடி இருக்கின்றாளால் கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
8-1. சிலைமிலங்கு
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
தலைவியின் நிலையைத் தாய் சொல்லும் பதிகம். வில், ஆழி, தண்டு, சங்கம் என்று அவனுடைய படைகளின் பெயர்களையே அவள் உளறுகிறாள்; மலைபோன்ற நான்கு தோள்கள் என்று அவனது வடிவையே மீண்டும் மீண்டும் சொல்கிறாள். காதலின் அறிகுறியாக ஆழ்வார் காட்டுவது பாடலோ கண்ணீரோ அல்ல — நினைவின் திரும்பத் திரும்பல்.
பெரிய திருமொழி 8-1 - சிலைமிலங்கு (திருக்கண்ணபுரம் 1 - தலைமகனிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல் கண்ட தாய் வியந்து கூறிய பாசுரம்)
செருவரை முன்னாசறுத்த சிலை அன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால் பொருவரை முன்போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா என்னப்பா! என்கின்றாளால் கருவரை போல் நின்றானைக் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
துன்னு மாமணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் மின்னுமா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் பொன்னின் மாமணி ஆரம் அணியாகத்து இஇலங்குமால் என்கின்றாளால் கன்னிமாமதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால் போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என் அம்மான் என்கின்றாளால் ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் கார் வானம் நின்றதிரும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
அடுத்தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் முடித்தலமும் பொற்பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது! என்கின்றாளால் ் வடித்தடங்கண் மலரவளோ வரை ஆகத்து உள் இருப்பாள் என்கின்றாளால் கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின்றாளால் நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் காரார் வயல் அமரும்! கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால் அவ்வரத்த அடி இணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் மைவளர்க்கும் மணி உருவம் மரகதமோ! மழை முகிலோ! என்கின்றாளால் கைவளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
கொற்றப் புள் ஒன்றேறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ! என்கின்றாளால் கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால் உண்டு இவர் பால் அன்பு எனக்கென்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில்? யாம் என்றே பயில்கின்றாளால் கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ?
மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடிபொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் மருவும் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே
அடிவரவு: சிலை செருவரை துன்னு தார் அடி பேர் செவ்வரத்த கொற்றம் வண்டு மாவளரும் தெள்ளியீர்