பெரும்புறக்கடலை அடலேற்றினைப் பெண்ணை ஆணை எண்ணில் முனிவர்க்கருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப் பத்தர் ஆவியை நித்திலத்தொத்தினை அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதி இன்சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
7-10. பெரும்புறக்கடல்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
பெரும் புறக்கடலையும், அடலேற்றையும், பெண்ணையும் ஆணையும், முனிவர்க்கு அருள் தரும் தவத்தையும் ஒருங்கே அவனாகச் சொல்லும் பதிகம். எதிரெதிரானவை என்று நாம் கருதுவனவற்றை ஒரே பட்டியலில் வைப்பதன் மூலம், அவற்றுக்கு அப்பாற்பட்டவனைச் சுட்டுகிறார். ஏழாம் பத்து இந்த முரண்களின் ஒருமையுடன் நிறைவடைகிறது.
பெரிய திருமொழி 7-10 - பெரும்புறக்கடல் (திருக்கண்ணமங்கை)
மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யைப் பொய்யினைக் கையில் ஓர் சங்குடை மைந்நிறக்கடலைக் கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை நென்னலைப் பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மாமதியம் தவழ் மங்குலைச் சுடரை வட மாமலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை பகலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
பேய் முலைத்தல நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப்படூன் தேவனை மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை காசினை மணியைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடூம் ஐயனைக் கையில் ஆழி ஒன்றேந்திய கூற்றினை குருமா மணிக்குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை ் உலகேழினை ஊழியை ஆழி ஏந்திய கையனை அந்தணர் கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை அரியைப் பரி கீறிய அப்பனை அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை களி வண்டறையும் பொழில் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
வெஞ்சினக் களிற்றை விளங்காய் விழக் கன்று வீசிய ஈசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை மண்ணினை மலையை அலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினை கண்களாரளவும் நின்று கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரை செய்த வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை வல்லராய் உரைப்பார் மதியம் தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வெய்துவர் மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்றேந்திய கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே
அடிவரவு: பெரு மெய் எங்களுக்கு பேய் ஏற்றினை துப்பனை திருத்தனை வெஞ்சினம் பண்ணினை கண்ணமங்கையுள் சிலை