கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும் தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே
7-9. கள்ளம் மனம்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"கள்ள மனம் விள்ளும் வகை கருதி" — வஞ்சனை நிறைந்த மனம் விலகும் வழி தேடி அவன் கழல் தொழுவீர் என்று ஆழ்வார் அழைக்கும் பதிகம். மனத்தைத் திருத்திய பின் வழிபடச் சொல்லாமல், வழிபாட்டாலேயே மனம் திருந்தும் என்கிறார். தொடங்குவதற்குத் தகுதி தேவையில்லை என்பதே இதன் ஆறுதல்.
பெரிய திருமொழி 7-9 - கள்ளம் மனம் (இருச்சிறுபுலியூர்)
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்! திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து உருவக் குறளடிகள் அடி உணர்மின் உணர்வீரே
பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்! அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால் சிறை வண்டினம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே
வானார் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால் தானாகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதியாம் தேனார் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆனாயனது அடியல்லது ஒன்றறியேன் அடியேனே
நந்தா நெடூநரகத்திடை நணுகா வகை நாளும் எந்தாய்! என இமையோர் தொழுதேத்தும் இடம் எறி நீர்ச் செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அந்தாமரை அடியாய்! உனதடியேற்கு அருள் புரியே
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி கழுநீரொடு மடவார் அவர் கண்வாய் முகமலரும் செழுநீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம் தொழுநீர்மையது உடையார் அடி தொழுவார் துயர் இலரே
சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் மாயா! எனக்குரையாய் இது மறை நான்கினுளாயோ? தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆயோ? உனதடியார் மனத்தாயோ? அறியேனே
மையார் வரி நீலம் மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஐவாய் அரவணை மேல் உறை அமலா! அருளாயே
கருமா முகில் உருவா! கனல் உருவா! புனல் உருவா! பெருமால் வரை உருவா! பிற உருவா! நினதுருவா! திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அருமாகடல் அமுதே! உனது அடியே சரணாமே
சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஏரார் முகில்வண்ணன் தனை இமையோர் பெருமானை காரார் வயல் மங்கைக்கிறை கலியன் ஒலி மாலை பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே
அடிவரவு: கள்ளம் தெருவில் பறையும் வான் நந்தா முழு சேயோங்கு மையார் கரு சீரார் பெரும்புறம்