Skip to the text
பெரிய திருமொழி

7-7. திருவுக்கும்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"திருவுக்கும் திருவாகிய செல்வா, தெய்வத்துக்கு அரசே, செய்ய கண்ணா" — அடுக்கடுக்கான விளிகளால் தொடங்கும் பதிகம். திருமகளுக்கே திருவாக இருப்பவன் என்னும் தொடர் இதன் சிறப்பு. செல்வத்தின் மூலமே அவன் என்றால், வேறு எதைத் தேடுவது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

பெரிய திருமொழி 7-7 - திருவுக்கும்‌ (திருவழுந்தூர்‌ 3)

1608

திருவுக்கும்‌ திருவாகிய செல்வா! தெய்வத்துக்கு அரசே! செய்ய கண்ணா! உருவச்‌ செஞ்சுடர்‌ ஆழி வல்லானே! உலகுண்ட ஒருவா! திருமார்பா ஒருவற்காற்றி உய்யும்‌ வகை என்றால்‌! உடன்‌ நின்று ஐவர்‌ என்னுள்‌ புகுந்து ஒழியாது அருவித்‌ தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1609

பந்தார்‌ மெல்விரல்‌ நல்வளைத்‌ தோளி பாவை பூமகள்‌ தன்னொடும்‌ உடனே வந்தாய்‌ என்‌ மனத்தே மன்னி நின்றாய்‌ மால்வண்ணா! மழை போல்‌ ஒளிவண்ணா! சந்தோகா! பெளழியா! தைத்திரியா! சாம வேதியனே! நெடுமாலே! அந்தோ! நின்னடி அன்றி மற்றறியேன்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1610

நெய்யார்‌ ஆழியும்‌ சங்கமும்‌ ஏந்தும்‌ நீண்ட தோளுடையாய்‌! அடியேனைச்‌ செய்யாத உலகத்திடைச்‌ செய்தாய்‌ சிறுமைக்கும்‌ பெருமைக்கும்‌ உள்புகுந்து பொய்யால்‌ ஐவர்‌ என்‌ மெய்குடி ஏறிப்‌ இன்றால்‌ போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்‌ ஐயா! நின்னடி அன்றி மற்றறியேன்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1611

பரனே! பஞ்சவன்‌ பெளழியன்‌ சோழன்‌ பார்‌ மன்னர்‌ மன்னர்‌ தாம்‌ பணிந்து ஏத்தும்‌ வரனே! மாதவனே! மதுசூதா! மற்றோர்‌ நல்துணை நின்னலால்‌ இலேன்‌ காண்‌ நரனே! நாரணனே! திருநறையூர்‌ நம்பீ! எம்பெருமான்‌! உம்பராளும்‌ அரனே! ஆதிவராகம்‌ முன்‌ ஆனாய்‌! அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1612

விண்டான்‌ விண்‌ புக வெஞ்சமத்து அரியாய்ப்‌ பரியோன்‌ மார்வகம்‌ பற்றிப்‌ பிளந்து பண்டு ஆனுய்ய ஓர்‌ மால்வரை ஏந்தும்‌ பண்பாளா! பரனே! பவித்திரனே! கண்டேன்‌ நான்‌ கலி யுகத்ததன்‌ தன்மை கருமம்‌ ஆவதும்‌ என்தனக்கு அறிந்தேன்‌ அண்டா! நின்னடி அன்றி மற்றறியேன்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1613

தோயா இன்தயிர்‌ நெய்‌ அமுதுண்ணச்‌ சொன்னார்‌ சொல்லி நகும்‌ பரிசே பெற்ற தாயால்‌ ஆப்புண்டிருந்து அழுதேங்கும்‌ தாடாளா! தரையோர்க்கும்‌ விண்ணோர்க்கும்‌ சேயாய்‌! கிரேத திரேத துவாபர கலி யுகம்‌ இவை நான்கும்‌ முன்‌ ஆனாய்‌! ஆயா! நின்னடி அன்றி மற்றறியேன்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1614

கறுத்துக்‌ கஞ்சனை அஞ்ச முனிந்தாய்‌! கார்வண்ணா! கடல்‌ போல்‌ ஒளிவண்ணா! இறுத்திட்டான்‌ விடை ஏழும்‌ முன்‌ வென்றாய்‌! எந்தாய்‌! அந்தரம்‌ ஏழும்‌ முன்‌ ஆனாய்‌! பொறுத்துக்‌ கொண்டிருந்தால்‌ பொறுக்கொண்ணாப்‌ போகமே நுகர்வான்‌ புகுந்து ஐவர்‌ அறுத்துத்‌ தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1615

நெடியானே! கடியார்‌ கலி நம்பீ! நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை கடியார்‌ காளையர்‌ ஐவர்‌ புகுந்து காவல்‌ செய்த அக்காவலைப்‌ பிழைத்து குடிபோந்து உன்னடுக்‌ கீழ்‌ வந்து புகுந்தேன்‌ கூறை சோறு இவை தந்து எனக்கருளி அடியேனைப்‌ பணி ஆண்டுகொள்‌ எந்தாய்‌! அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1616

கோவாய்‌ ஐவர்‌ என்‌ மெய்குடி ஏறிக்‌ கூறை சோறு இவை தா என்று குமைத்துப்‌ போகார்‌ நான்‌ அவரைப்‌ பொறுக்ககிலேன்‌ புனிதா! புட்கொடுயாய்‌! நெடுமாலே! ர்‌ தீவாய்‌ நாகணையில்‌ துயில்வானே! திருமாலே! இனிச்‌ செய்வதொன்று அறியேன்‌ ஆஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்‌ அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானே!

1617

அன்ன மன்னு பைம்பூம்பொழில்‌ சூழ்ந்த அழுந்தூர்‌ மேல்‌ திசை நின்ற அம்மானை கன்னி மன்னு திண்தோள்‌ கலி கன்றி ஆலி நாடன்‌ மங்கைக்‌ குல வேந்தன்‌ சொன்ன இன்தமிழ்‌ நன்மணிக்கோவை தூய மாலை இவை பத்தும்‌ வல்லார்‌ மன்னி மன்னவராய்‌ உலகாண்டு மான வெண்குடைக்‌ கீழ்‌ மகிழ்வாரே

அடிவரவு: திருவுக்கும்‌ பந்தார்‌ நெய்‌ பரனே விண்டான்‌ தோயா கறுத்து நெடியானே கோவாய்‌ அன்னம்‌ செங்கமலம்‌