Skip to the text
பெரிய திருமொழி

7-5. தந்தை காலில்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

தந்தையின் காலில் இருந்த பெருவிலங்கு தாள் அவிழ, நள்ளிருளில் வந்த எந்தை பெருமானாரின் ஊரைப் பாடும் பதிகம். ஒரு பிறப்பினால் சிறை திறந்ததையும், இருள் விலகியதையும் ஆழ்வார் இணைத்துச் சொல்கிறார். நள்ளிரவில் நிகழ்ந்த வருகையே விடியலாகவும் ஆகிறது.

பெரிய திருமொழி 7-5 - தந்தை காலில்‌ (திருவழுந்தூர்‌)

1588

தந்தை காலில்‌ பெருவிலங்கு தாள்‌ அவிழ நள்ளிருட்கண்‌ வந்த எந்தை பெருமானார்‌ மருவி நின்ற ஊர்‌ போலும்‌ முந்தி வானம்‌ மழை பொழிய! மூவாவுருவின்‌ மறையாளர்‌ அந்தி மூன்றும்‌ அனல்‌ ஓம்பும்‌ அணியார்‌ வீதி அழுந்தூரே

1589

பாரித்தெழுந்த படை மன்னர்‌ தம்மை மாள பாரதத்துத்‌ தேரில்‌ பாகனாய்‌ ஊர்ந்த தேவ தேவன்‌ ஊர்‌ போலும்‌ நீரில்‌ பணைத்த நெடூுவாளைக்கு அஞ்சிப்‌ போன குருகினங்கள்‌ ஆரல்‌ கவுளோடு அருகணையும்‌ அணியார்‌ வயல்‌ சூழ்‌ அழுந்தூரே

1590

செம்பொன்‌ மதிள்‌ சூழ்‌ தென்னிலங்கைக்கு இறைவன்‌ சிரங்கள்‌ ஐயிரண்டூும்‌ உம்பர்‌ வாலிக்கு இலக்காக உதிர்த்த உரவோன்‌ ஊர்‌ போலும்‌ கொம்பில்‌ ஆர்ந்த மாதவி மேல்‌ கோதி மேய்ந்த வண்டினங்கள்‌ அம்பராவும்‌ கண்மடவார்‌ ஐம்பாலணையும்‌ அழுந்தூரே

1591

வெள்ளத்துள்‌ ஓர்‌ ஆலிலை மேல்‌ மேவி அடியேன்‌ மனம்‌ புகுந்து என்‌ உள்ளத்துள்ளும்‌ கண்ணுள்ளும்‌ நின்றார்‌ நின்ற ஊர்‌ போலும்‌ புள்ளுப்‌ பிள்ளைக்கு இரை தேயுப்‌ போன காதல்‌ பெடையோடும்‌ அள்ளல்‌ செறுவில்‌ கயல்‌ நாடும்‌ அணியார்‌ வயல்‌ சூழ்‌ அழுந்தூரே

1592

பகலும்‌ இரவும்‌ தானேயாய்ப்‌ பாரும்‌ விண்ணும்‌ தானேயாய்‌ நிகரில்‌ சுடராய்‌ இருளாகி நின்றார்‌ நின்ற ஊர்‌ போலும்‌ துகிலின்‌ கொடியும்‌ தேர்த்துகளும்‌ துன்னி மாதர்‌ கூந்தல்‌ வாய்‌ அகிலின்‌ புகையால்‌ முகில்‌ ஏய்க்கும்‌ அணியார்‌ வீதி அழுந்தூரே

1593

ஏடிலங்கு தாமரை போல்‌ செவ்வாய்‌ முறுவல்‌ செய்தருளி மாடு வந்து என்‌ மனம்‌ புகுந்து நின்றார்‌ நின்ற ஊர்‌ போலும்‌ நீடு மாடத்‌ தனிச்‌ சூலம்‌ போழக்‌ கொண்டல்‌ துளி தூவ ஆடலரவத்து ஆர்ப்பு ஓவா அணியார்‌ வீதி அழுந்தூரே

1594

மாலைப்‌ புகுந்து மலரணை மேல்‌ வைகி அடியேன்‌ மனம்‌ புகுந்து என்‌ நீலக்‌ கண்கள்‌ பனி மல்க நின்றார்‌ நின்ற ஊர்‌ போலும்‌ வேலைக்‌ கடல்‌ போல்‌ நெடு வீதி விண்‌ தோய்‌ சுதை வெண்மணி மாடத்து ஆலைப்‌ புகையால்‌ அழல்‌ கதிரை மறைக்கும்‌ வீதி அழுந்தூரே

1595

வஞ்சி மருங்குலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்‌ நெஞ்சு நிறையக்‌ கை கூப்பி நின்றார்‌ நின்ற ஊர்‌ போலும்‌ பஞ்சி அன்ன மெல்லடி நற்பாவைமார்கள்‌ ஆடகத்தின்‌ அஞ்சிலம்பின்‌ ஆர்ப்பு ஓவா அணியார்‌ வீதி அழுந்தூரே

1596

என்‌ ஐம்புலனும்‌ எழிலும்‌ கொண்டு இங்கே நெருநல்‌ எழுந்தருளி பொன்னங்கலைகள்‌ மெலிவெய்தப்‌ போன புனிதர்‌ ஊர்‌ போலும்‌ மன்னு முதுநீர்‌ அரவிந்த மலர்‌ மேல்‌ வரிவண்டு இசை பாட அன்னம்‌ பெடையோடு உடனாடும்‌ அணியார்‌ வயல்‌ சூழ்‌ அழுந்தூரே

1597

நெல்லில்‌ குவளை கண்‌ காட்ட நீரில்‌ குமுதம்‌ வாய்‌ காட்ட அல்லிக்‌ கமலம்‌ முகம்‌ காட்டும்‌ கழனி அழுந்தூர்‌ நின்றானை வல்லிப்‌ பொதும்பில்‌ குயில்‌ கூவும்‌ மங்கை வேந்தன்‌ பரகாலன்‌ சொல்லில்‌ பொலிந்த தமிழ்‌ மாலை சொல்லப்‌ பாவம்‌ நில்லாவே

அடிவரவு: தந்தை பாரித்து செம்பொன்‌ வெள்ளத்துள்‌ பகல்‌ ஏடு மாலை வஞ்சி என்னைம்புலனும்‌ நெல்லில்‌ சிங்கம்‌