Skip to the text
பெரிய திருமொழி

7-2. புள்ளாய்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"புள்ளாய், ஏனமுமாய்ப் புகுந்து என்னை உள்ளம் கொண்ட கள்வா" — பறவையாகவும் பன்றியாகவும் வந்து தன் உள்ளத்தைக் கவர்ந்தவனைத் திருடன் என்று அழைக்கும் பதிகம். அச்சொல்லைச் சொன்னதுமே கண்கள் நீர் சொரிவதாக ஆழ்வார் சொல்கிறார். குற்றம் சாட்டுவதுபோலவே அது ஒரு அன்பின் அழைப்பாகவும் ஒலிக்கிறது.

பெரிய திருமொழி 7-2. - புள்ளாய்‌ (திருநறையூர்‌ 9)

1558

புள்ளாய்‌ ஏனமுமாய்ப்‌ புகுந்து என்னை உள்ளம்‌ கொண்ட கள்வா! என்றலும்‌ என்‌ கண்கள்‌ நீர்‌ சோர்தருமால்‌ உள்ளே நின்று உருகி நெஞ்சம்‌ உன்னை உள்ளியக்கால்‌ நள்ளேன்‌ உன்னை அல்லால்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1559

ஓடா ஆளரியின்‌ உருவாய்‌ மருவி என்தன்‌ மாடே வந்து அடியேன்‌ மனம்‌ கொள்ள வல்ல மைந்தா! பாடேன்‌ தொண்டர்‌ தம்மைக்‌ கவிதைப்‌ பனுவல்‌ கொண்டு நாடேன்‌ உன்னை அல்லால்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1560

எம்மானும்‌ எம்மனையும்‌ எனைப்‌ பெற்று ஒழிந்ததற்‌ பின்‌ அம்மானும்‌ அம்மனையும்‌ அடியேனுக்காகி நின்ற நன்மான ஒண்சுடரே! நறையூர்‌ நின்ற நம்பீ! உன்‌ மைம்மான வண்ணம்‌ அல்லால்‌ மகிழ்ந்து ஏத்த மாட்டேனே

1561

சிறியாய்‌ ஓர்‌ பிள்ளையுமாய்‌ உலகுண்டு ஓர்‌ ஆலிலை மேல்‌ உறைவாய்‌! என்‌ நெஞ்சின்‌ உள்ளே உறைவாய்‌ உறைந்தது தான்‌ அறியாதிருந்து அறியேன்‌ அடியேன்‌ அணிவண்டு கிண்டும்‌ நறைவாரும்‌ பொழில்‌ சூழ்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1562

நீண்டாயை வானவர்கள்‌ நினைந்து ஏத்திக்‌ காண்பரிதால்‌ ஆண்டாய்‌ என்று ஆதரிக்கப்படூவாய்க்கு நான்‌ அடிமை பூண்டேன்‌ என்‌ நெஞ்சின்‌ உள்ளே புகுந்தாயைப்‌ போகலொட்டேன்‌ நாண்‌ தான்‌ உனக்கு ஒழிந்தேன்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1563

எந்தாதை தாதை அப்பால்‌ எழுவர்‌ பழவடிமை வந்தார்‌ என்‌ நெஞ்சின்‌ உள்ளே வந்தாயைப்‌ போகலொட்டேன்‌ அந்தோ! என்‌ ஆருயிரே! அரசே! அருள்‌ எனக்கு நந்தாமல்‌ தந்த எந்தாய்‌! நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1564

மன்னஞ்ச ஆயிரம்‌ தோள்‌ மழுவில்‌ துணித்த மைந்தா! என்‌ நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப்‌ போய்ப்‌ பிறர்‌ ஒருவர்‌ வன்னெஞ்சம்‌ புக்கிருக்க ஒட்டேன்‌ வளைத்து வைத்தேன்‌ நன்னெஞ்சவன்ன மன்னும்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1565

எப்போதும்‌ பொன்மலர்‌ இட்டு இமையோர்‌ தொழுது தங்கள்‌ கைப்போது கொண்டு இறைஞ்சிக்‌ கழல்‌ மேல்‌ வணங்க நின்றாய்‌ இப்போது என்‌ நெஞ்சின்‌ உள்ளே புகுந்தாயைப்‌ போகலொட்டேன்‌ நற்போது வண்டு கிண்டும்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1566

ஊனேர்‌ ஆக்கை தன்னை உழந்தோம்பி வைத்தமையால்‌ யானாய்‌ என்தனக்காய்‌ அடியேன்‌ மனம்‌ புகுந்த தேனே! தீங்கரும்பின்‌ தெளிவே! என்‌ சிந்தை தன்னால்‌ நானே எய்தப்‌ பெற்றேன்‌ நறையூர்‌ நின்ற நம்பீயோ!

1567

நன்னீர்‌ வயல்‌ புடை சூழ்‌ நறையூர்‌ நின்ற நம்பியை கன்னீர மால்‌ வரைத்‌ தோள்‌ கலிகன்றி மங்கையர்‌ கோன்‌ சொன்னீர சொல்‌ மாலை சொல்லுவார்கள்‌ சூழ்‌ விசும்பில்‌ நன்னீர்மையால்‌ மகிழ்ந்து நெடுங்காலம்‌ வாழ்வாரே

அடிவரவு: புள்‌ ஓடா எம்மானும்‌ சிறியாய்‌ நீண்டாய்‌ எந்தாதை மன்‌ எப்போதும்‌ ஊனேர்‌ நன்னீர்‌ சினவில்‌