Skip to the text
பெரிய திருமொழி

7-1. கறவா மடநாகு

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"கறவா மட நாகு தன் கன்று உள்ளினாற் போல" — கறக்காத இளம்பசு தன் கன்றை நினைப்பது போல, மறவாமல் உன்னையே அழைக்கிறேன் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். இது தேர்ந்தெடுத்த பக்தி அல்ல, தானாக நிகழும் இயல்பான ஏக்கம். உவமையின் எளிமையே இப்பதிகத்தை மறக்க முடியாததாக்குகிறது.

பெரிய திருமொழி 7-1 - கறவா மடநாகு (திருநறையூர்‌ 8)

1548

கறவா மடநாகு தன்‌ கன்று உள்ளினாற்‌ போல்‌ மறவாது அடியேன்‌ உன்னையே அழைக்கின்றேன்‌ நறவார்‌ பொழில்‌ சூழ்‌ நறையூர்‌ நின்ற நம்பி! பிறவாமை எனைப்‌ பணி எந்தை பிரானே!

1549

வற்றா முதுநீரொடு மால்‌ வரை ஏழும்‌ துற்றாக முன்‌ துற்றிய தொல்‌ புகழோனே! அற்றேன்‌ அடியேன்‌ உன்னையே அழைக்கின்றேன்‌ பெற்றேன்‌ அருள்‌ தந்திடு என்‌ எந்தை பிரானே!

1550

தாரேன்‌ பிறர்க்கு உன்‌ அருள்‌ என்னிடை வைத்தாய்‌ ஆரேன்‌ அதுவே பருகிக்‌ களிக்கின்றேன்‌ காரேய்‌ கடலே மலையே திருக்கோட்டி யூரே உகந்தாயை உகந்து அடியேனே

1551

புள்‌ வாய்‌ பிளந்த புனிதா! என்று அழைக்க உள்ளே நின்று என்‌ உள்ளம்‌ குளிரும்‌ ஒருவா! கள்வா! கடல்‌ மல்லைக்‌ கிடந்த கரும்பே! வள்ளால்‌! உன்னை எங்ஙனம்‌ நான்‌ மறக்கேனே?

1552

வில்லேர்‌ நுதல்‌ வேல்‌ நெடூங்கண்ணியும்‌ நீயும்‌ கல்லார்‌ கடூங்கானம்‌ திரிந்த களிறே! நல்லாய்‌! நரனாரணனே! எங்கள்‌ நம்பி! சொல்லாய்‌ உன்னை யான்‌ வணங்கித்‌ தொழுமாறே

1553

பணியேய்‌ பரங்குன்றின்‌ பவளத்‌ திரளே! முனியே! திருமூழிக்களத்து விளக்கே! இனியாய தொண்டரோம்‌ பருகு இன்னமுதாய கனியே! உன்னைக்‌ கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே

1554

கதியேல்‌ இல்லை நின்‌ அருள்‌ அல்லது எனக்கு நிதியே! திருநீர்மலை நித்திலத்தொத்தே! பதியே! பரவித்‌ தொழும்‌ தொண்டர்‌ தமக்குக்‌ கதியே! உனைக்‌ கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே

1555

அத்தா! அரியே! என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார்‌ பிறர்‌ என்னை முத்தே! மணிமாணிக்கமே! முளைக்கின்ற வித்தே! உன்னை எங்ஙனம்‌ நான்‌ விடுகேனே?

1556

தூயாய்‌! சுடர்‌ மாமதி போல்‌ உயிர்க்கெல்லாம்‌ தாயாய்‌ அளிக்கின்ற தண்தாமரைக்‌ கண்ணா! ஆயா! அலைநீர்‌ உலகேழும்‌ முன்‌ உண்ட வாயா! உன்னை எங்ஙனம்‌ நான்‌ மறக்கேனே?

1557

வண்டார்‌ பொழில்‌ சூழ்‌ நறையூர்‌ நம்பிக்கு என்றும்‌ தொண்டாய்க்‌ கலியன்‌ ஒலி செய்‌ தமிழ்‌ மாலை தொண்டீர்‌! இவை பாடுமின்‌ பாடி நின்றாட உண்டே விசும்பு உன்தமக்கு இல்லை துயரே

அடிவரவு: கறவா வற்றா தாரேன்‌ புள்‌ வில்‌ பனி கதி அத்தா தூயாய்‌ வண்டார்‌ புள்ளாய்‌