வெண்ணெயளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணலரிய பிரானே நாரணா நீராட வாராய்
2-4. வெண்ணெயளைந்த
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
நீராட்டும் பருவம். "வெண்ணெய் வாசனையும் விளையாட்டுப் புழுதியுமாய் இன்றிரவு உன்னைப் படுக்க விடமாட்டேன்" என்று தாய் பிடிவாதம் பிடிக்கிறாள். எண்ணெய் தேய்த்து, குடத்தை உருட்டி, கனிகள் தருவேன் என்று ஆசை காட்டி அழைக்கிறாள். தொழுவில் புகுந்து புழுதி அளைந்த பொன்மேனியைக் காணப் பெரிதும் உகக்கிறேன், ஆனாலும் கண்டவர் பழிப்பரே என்று செல்லமாகக் கடிகிறாள்.
பெரியாழ்வார் திருமொழி 2-4 வெண்ணெயளைந்த (கண்ணனை நீராட அழைத்தல்)
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் ஆய்ச்சியரெல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணிவண்ணா மஞ்சனமாட நீ வாராய்
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறுசாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் க
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னலுறிதியேல் நம்பீ செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய்
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர் போலே வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட நீ வாராய்
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய்
கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்தோடியோர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திருநல் நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி அளைந்த பொன்மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாணெத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்
கார்மலிமேனி நிறத்துக் கண்ண பிரானை உகந்து வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை பார்மலிதொல் புதுவைக்கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல் சீர்மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதுமிலரே