ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை தோளும் தலையும் துணிவெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் வேளும் சேயும் அனையாரும் வேற்கணாரும் பயில் வீதி நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே
6-7. ஆளும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்" — தன்னை ஆளாகவும் பணியாகவும் ஏற்றுக்கொண்டவனைப் பாடும் பதிகம். இரவில் திரியும் அரக்கரின் தோளும் தலையும் துணிபட வெஞ்சிலை வளைத்தவனை நினைவுகூர்கிறார். காப்பதற்காகக் கடுமை காட்டியவனே தன்னை உரிமையுடன் ஏற்றுக்கொண்டான் என்பதில் ஆழ்வார் நிம்மதி கொள்கிறார்.
பெரிய திருமொழி 6-7 - ஆளும் (திருநறையூர் 4)
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னர் உடல் துணிய தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் வார்புறவில் பனி சேர் முல்லை பல்லரும்பப் பானல் ஒருபால் கண் காட்ட நனிசேர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே
தெள்ளார் கடல்வாய் விடவாய சினவாள் அரவில் துயில் அமர்ந்து துள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட நள்ளார் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே
ஓளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண்கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென்மலர் மேல் ர களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே
வள்ளி கொழுனன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கி ஓட விறல் வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்து - உகந்தான் பள்ளி கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளியூடூும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூராழிப் படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் நீறும் பூசி ஏறூரும் இறையோன் சென்று குறை இரப்ப மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்பகலத்து அளித்து உகந்தான் நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய் தமிழ் மாலை பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே
அடிவரவு: ஆளும் முனி தெள்ளார் ஒளியா வில்லார் வள்ளி மிடையா பந்தார் ஆறும் நன்மை மான்