Skip to the text
பெரிய திருமொழி

6-5. கலங்க

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

முந்நீரைக் கலங்கக் கடைந்து அமுதம் எடுத்து, இமையோரின் துளக்கம் தீர்த்தவனைப் பாடும் பதிகம். எடுத்த அமுதத்தைத் தான் கொள்ளாமல் தேவர்க்கு அளித்ததையே ஆழ்வார் சிறப்பிக்கிறார். உழைப்பு அவனுடையது, பயன் பிறருடையது — இதுவே அவனது வழக்கம்.

பெரிய திருமொழி 6-5 - கலங்க (திருநறையூர்‌ 2)

1488

கலங்க முந்நீர்‌ கடைந்து அமுதம்‌ கொண்டு இமையோர்‌ துளங்கல்‌ தீர நல்கு சோதிச்‌ சுடராய வலங்கை ஆழி இடங்கைச்‌ சங்கம்‌ உடையானூர்‌ நலங்கொள்‌ வாய்மை அந்தணர்‌ வாழும்‌ நறையூரே

1489

முனையார்‌ சீயமாகி அவுணன்‌ முரண்‌ மார்வம்‌ புனை வாள்‌ உகிரால்‌ போழ்பட ஈர்ந்த புனிதனூர்‌ சினையார்‌ தேமாஞ்‌ செந்தளிர்‌ கோதிக்‌ குயில்‌ கூவும்‌ நனையார்‌ சோலை சூழ்ந்து அழகாய நறையூரே

1490

ஆனைப்‌ புரவி தேரொடு காலாள்‌ அணி கொண்ட சேனைத்‌ தொகையைச்‌ சாடி இலங்கை செற்றானூர்‌ மீனைத்‌ தழுவி விழ்ந்து எழும்‌ மள்ளர்க்கு அலமந்து நானப்‌ புதலில்‌ ஆமை ஒளிக்கும்‌ நறையூரே

1491

உறியார்‌ வெண்ணெய்‌ உண்டு உரலோடும்‌ கட்டூண்டு வெறியார்‌ கூந்தல்‌ பின்னை பொருட்டு ஆன்‌ வென்றானூர்‌ பொறியார்‌ மஞ்ஞை பூம்பொழில்‌ தோறும்‌ நடமாட நறு நாண்‌ மலர்‌ மேல்‌ வண்டு இசை பாடும்‌ நறையூரே

1492

விடை ஏழ்‌ வென்று மென்தோள்‌ ஆய்ச்சிக்கு அன்பனாய்‌ நடையால்‌ நின்ற மருதம்‌ சாய்த்த நாதனூர்‌ பெடையோடு அன்னம்‌ பெய்வளையார்‌ தம்‌ பின்‌ சென்று நடையோடியலி நாணி ஒளிக்கும்‌ நறையூரே

1493

பகுவாய்‌ வன்பேய்‌ கொங்கை சுவைத்து ஆருயிர்‌ உண்டு புகுவாய்‌ நின்ற போதகம்‌ வீழப்‌ பொருதானூர்‌ நெகுவாய்‌ நெய்தல்‌ பூமது மாந்திக்‌ கமலத்தின்‌ நகுவாய்‌ மலர்‌ மேல்‌ அன்னம்‌ உறங்கும்‌ நறையூரே

1494

முந்து நூலும்‌ முப்புரி நூலும்‌ முன்னீந்த அந்தணாளன்‌ பிள்ளையை அஞ்ஞான்று அளித்தானூர்‌ பொந்தில்‌ வாழும்‌ பிள்ளைக்காகிப்‌ புள்ளோடி நந்துவாரும்‌ பைம்புனல்‌ வாவி நறையூரே

1495

வெள்ளைப்‌ புரவித்‌ தேர்‌ விசயற்காய்‌ விறல்‌ வியூகம்‌ விள்ள சிந்துக்‌ கோன்‌ விழ ஊர்ந்த விமலனூர்‌ கொள்ளைக்‌ கொழு மீன்‌ உண்‌ குருகு ஓடிப்‌ பெடையோடும்‌ நள்ளக்‌ கமலத்‌ தேறல்‌ உகுக்கும்‌ நறையூரே

1496

பாரை ஊரும்‌ பாரம்‌ தீரப்‌ பார்த்தன்‌ தன்‌ தேரை ஊரும்‌ தேவ தேவன்‌ சேருமூர்‌ தாரை ஊரும்‌ தண்‌ தளிர்‌ வேலி புடை சூழ நாரை ஊரும்‌ நல்‌ வயல்‌ சூழ்ந்த நறையூரே

1497

தாமத்‌ துளப நீள்‌ முடி மாயன்‌ தான்‌ நின்ற நாமத்‌ திரள்‌ மாமாளிகை சூழ்ந்த நறையூர்‌ மேல்‌ காமக்‌ கதிர்‌ வேல்‌ வல்லான்‌ கலியன்‌ ஒலி மாலை சேமத்‌ துணையாம்‌ செப்பும்‌ அவர்க்குத்‌ திருமாலே

அடிவரவு: கலங்க முனை ஆனை உறியார்‌ விடை பகுவாய்‌ முந்து வெள்ளை பாரை தாமம்‌ அம்பரம்‌