பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும் என் தாமே பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழுமா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்கமா நகர் அமர்ந்தானே
5-7. பண்டை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
பழைய நான்மறையும், வேள்வியும், கேள்விப் பதங்களும், அவற்றின் பொருளும் அவனேயாக இருப்பதைச் சொல்லும் பதிகம். மறையின் சொல்லும் அச்சொல் சுட்டும் பொருளும் ஒன்றேயானால், தேடுவதற்கும் தேடப்படுவதற்கும் இடையே இடைவெளி இல்லை. கற்றல் என்பது சேர்தலின் தொடக்கம் என்பதை இப்பதிகம் உணர்த்துகிறது.
பெரிய திருமொழி 5-7 - பண்டை (திருவரங்கம் 4)
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே இயற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்கமா நகர் அமர்ந்தானே
மண்ணும் மாநிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னு மாயிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறம் கெட ஒரு நாள் அன்னமாய் அன்றங்கு அருமறை பயந்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே
மாயிரும் குன்றம் ஒன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி பாயிரும் பெளவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே
எங்ஙனே உய்வர்? தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்திழிய வெங்கண் வாளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது அங்ஙனே ஒக்க அரி உருவானான் அரங்கமா நகர் அமர்ந்தானே
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்றவன் அகல் விசும்பு அணைய ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்கமா நகர் அமர்ந்தானே
சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடூவிசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடு செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய அடூசரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே
ஊழியாய் ஓமத்துச்சியாய் ஒருகால் உடைய தேர் ஒருவனாய் உலகில் சூழிமால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடூசரம் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெட பகலே ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச் சேயனாய் அடியேற்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும் ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே
பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடை குழ்ந்து அன்னமாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்கமா நகர் அமர்ந்தானை மன்னு மாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே
அடிவரவு: பண்டை இந்திரன் மன்னு மாயிரும் எங்ஙனே ஆயிரம் சுரி ஊழி பேயினார் பொன்னும் ஏழை