Skip to the text
பெரிய திருமொழி

5-5. வெருவாதாள்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"வேங்கடமே, வேங்கடமே" என்று மகள் உளறுவதைத் தாய் சொல்லும் பதிகம். அஞ்சாதவள் வாய் வெருவுகிறாள், என் மடியில் இருக்க மறுக்கிறாள் என்று அவள் திகைக்கிறாள். ஓர் இடத்தின் பெயரே ஒருவரைப் பற்றிக்கொள்ளும் நிலையை இப்பதிகம் நுட்பமாகக் காட்டுகிறது.

பெரிய திருமொழி 5-5 - வெருவாதாள்‌ (திருவரங்கம்‌ 2)

1388

வெருவாதாள்‌ வாய்‌ வெருவி வேங்கடமே! வேங்கடமே! என்கின்றாளால்‌ மருவாளால்‌ என்‌ குடங்கால்‌ வாள்‌ நெடுங்கண்‌ துயில்‌ மறந்தாள்‌ வண்டார்‌ கொண்டல்‌ உருவாளன்‌ வானவர்‌ தம்‌ உயிராளன்‌ ஒலி திரை நீர்ப்‌ பெளவம்‌ கொண்ட திருவாளன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ எங்ஙனம்‌ நான்‌ சிந்திக்கேனே?

1389

கலையாளா அகலல்குல்‌ கனவளையும்‌ கையாளா என்‌ செய்கேன்‌ நான்‌? விலையாளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ? என்னும்‌ மெய்ய மலையாளன்‌ வானவர்‌ தம்‌ தலையாளன்‌ மராமரம்‌ ஏழ்‌ எய்த வென்றிச்‌ சிலையாளன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ எங்ஙனம்‌ நான்‌ சிந்திக்கேனே?

1390

மானாய மென்னோக்கி வாள்‌ நெடுங்கண்‌ நீர்‌ மல்கும்‌ வளையும்‌ சோரும்‌ தேனாய நறுந்துழாய்‌ அலங்கலின்‌ திறம்‌ பேசி உறங்காள்‌ காண்மின்‌ கானாயன்‌ கடி மனையில்‌ தயிர்‌ உண்டு நெய்‌ பருக நந்தன்‌ பெற்ற ஆனாயன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ அம்மனைமீர்‌! அறிகிலேனே

1391

தாய்‌ வாயில்‌ சொற்‌ கேளாள்‌ தன்‌ ஆயத்தோடு அணையாள்‌ தடமென்‌ கொங்கை யே ஆரச்‌ சாந்து அணியாள்‌ எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே? என்னும்‌ பேய்‌ மாய முலை உண்டு இவ்வுலகு உண்ட பெரு வயிற்றன்‌ பேசில்‌ நங்காய்‌! மாமாயன்‌ என்மகளைச்‌ செய்தனகள்‌ மங்கைமீர்‌! மதிக்கிலேனே

1392

பூண்‌ முலை மேல்‌ சாந்தணியாள்‌ பொருகயல்‌ கண்‌ மை எழுதாள்‌ பூவை பேணாள்‌ ஏணறியாள்‌ எத்தனையும்‌ எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே ? என்னும்‌ நாண்மலராள்‌ நாயகனாய்‌ நாமறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி ஆண்மகனாய்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ அம்மனைமீர்‌! அறிகிலேனே

1393

தாதாடு வன மாலை தாரானோ? என்றென்றே தளர்ந்தாள்‌ காண்மின்‌ யாதானும்‌ ஒன்று உரைக்கில்‌ எம்பெருமான்‌ திருவரங்கம்‌ என்னும்‌ பூமேல்‌ மாதாளன்‌ குடமாடி மதுசூதன்‌ மன்னர்க்காய்‌ முன்னம்‌ சென்ற தூதாளன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ எங்ஙனம்‌ நான்‌ சொல்லுகேனே?

1394

வாராளும்‌ இளங்கொங்கை வண்ணம்‌ வேறாயினவாறு எண்ணாள்‌ எண்ணில்‌ பேராளன்‌ பேரல்லால்‌ பேசாள்‌ இப்பெண்‌ பெற்றேன்‌ என்‌ செய்கேன்‌ நான்‌? தாராளன்‌ தண்‌ குடந்தை நகராளன்‌ ஐவர்க்காய்‌ அமரில்‌ உய்த்த தேராளன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ எங்ஙனம்‌ நான்‌ செப்புகேனே?

1395

உறவாதும்‌ இலள்‌ என்று ஒழியாது பலர்‌ ஏசும்‌ அலர்‌ ஆயிற்றால்‌ மறவாதே எப்பொழுதும்‌ மாயவனே! மாதவனே! எங்கின்றளால்‌ பிறவாத பேராளன்‌ பெண்ணாளன்‌ மண்ணாளன்‌ விண்ணோர்‌ தங்கள்‌ அறவாளன்‌ என்‌ மகளைச்‌ செய்தனகள்‌ அம்மனைமீர்‌! அறிகிலேனே

1396

பந்தோடு கழல்‌ மருவாள்‌ பைங்கிளியும்‌ பாலூட்டாள்‌ பாவை பேணாள்‌ வந்தானோ! திருவரங்கன்‌ வாரானோ? என்றென்றே வளையும்‌ சோரும்‌ சந்தோகன்‌ பெளழியன்‌ ஐந்தழல்‌ ஓம்பு தைத்திரியன்‌ சாம வேதி அந்தோ! வந்து என்‌ மகளைச்‌! செய்தனகள்‌ அம்மனைமீர்‌! அறிகிலேனே

1397

சேலுகளும்‌ வயல்‌ புடை சூழ்‌ திருவரங்கத்து அம்மானைச்‌ சிந்தை செய்த நீல மலர்க்கண்‌ மடவாள்‌ நிறை அழிவைத்‌ தாய்‌ மொழிந்த அதனை நேரார்‌ கால வேல்‌ பரகாலன்‌ கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்‌ மாலை சேர்‌ வெண்குடைக்‌ கீழ்‌ மன்னவராய்ப்‌ பொன்னுலகில்‌ வாழ்வர்‌ தாமே

அடிவரவு: வெருவாதாள்‌ கலை மான தாய்‌ பூண்‌ தாதாடு வாராளும்‌ உறவு பந்தோடு சேல்‌ கைம்மானம்‌