உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன் எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே
5-4. உந்திமேல்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
உந்தித் தாமரையில் நான்முகனைப் படைத்தவனும், உலகை உண்டவனுமான எந்தையின் இடத்தைச் சுட்டும் பதிகம். படைப்பும் காப்பும் ஒரே உடலிலிருந்தே தொடங்குகின்றன என்பதை ஆழ்வார் காட்சியாக்குகிறார். தேவர்களின் தந்தைக்கும் தந்தையானவனுக்கு உரிய இடம் இது என்று ஒவ்வொரு பாசுரமும் முடிகிறது.
பெரிய திருமொழி 5-4 - உந்திமேல் (திருவரங்கம் 1)
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் மணி நீள் முடி பைகொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால் தையல் நல்லார் குழல் மாலையும் மற்றவர் தடமுலை செய்ய சாந்தும் கலந்திழி புனல் சூழ் தென்னரங்கமே
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளன் இடம் என்பரால் வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ்பட வளைத்த வல்வில் தடக்கை அவனுக்கு இடம் என்பரால் துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் உம்பர் கோனும் உலகேழும் வந்தீண்டி வணங்கும் நல் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
கலை உடுத்த அகலல்குல் வன்பேய் மகள் தாயென முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழிடம்! என்பரால் குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்து உந்தி முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழிடம்! என்பரால் மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர் 11 செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய இம் மாயை! யாரும் அறியா வகையான் இடம் என்பரால் வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர்புனல் காவிரி ஆய பொன் மாமதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன் வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே
அடிவரவு: உந்திமேல் வையம் பண்டு விளைத்த வம்பு கலை கஞ்சன் ஏனம் சேயன் அல்லி வெருவாதாள் !1* வாழுமிடம் !!3 வாழுமிடம்