அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ணத் துமிலெழாயே இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ வரவும் காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாய திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து தைத்துப் பருகிடாயே
2-2. அரவணையாய்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
"அம்மம் உண்ண எழுந்திராய்" — உறங்கும் குழந்தையை உணவுக்கு எழுப்பும் பதிகம். இரவு முழுதும் உண்ணாமல் தூங்கிவிட்டாய், வயிறு ஒட்டிவிட்டதே என்று தாய் வருந்துகிறாள். அதே மூச்சில், "நீ பிறந்த பின் வைத்த நெய்யும் பாலும் தயிரும் வெண்ணெயும் எஞ்சியதே இல்லை" என்று குறையும் சொல்கிறாள். கவலையும் குறையும் செல்லமும் கலந்த தாயின் குரல் இங்கே கேட்கிறது.
பெரியாழ்வார் திருமொழி 2-2 அரவணையாய் (கண்ணனை முலையுண்ண அழைத்தல்)
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே
தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார் வந்து நின்மேல் பூசல் செய்ய வாழவல்ல வாசுதேவா உந்தையார் உன்திறத்தரல்லர் உன்னை நானொன்று உரப்ப மாட்டேன் நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலையுணாயே
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண் அமரர் கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே
தீயபுந்திக் கஞ்சன் உன்மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயன் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா ஆயர்பாடிக்கு அணிவிளக்கே அமர்ந்து வந்து என் முலையுணாயே
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலையுணாயே
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதுமென்னும் ஆசையாலே கண்டவர்கள் போக்கொழிந்தார் கண்ணிணையால் கலக்க நோக்கி வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ண வேண்டி கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலையுணாயே
இருமலை போலெதிர்ந்த மல்லர் இருவரங்கம் எரி செய்தாய் உன் திருமலிந்து திகழு மார்வு தேக்க வந்து என்னல்குலேறி ஒருமுலையை வாய் மடுத்து ஒருமுலையை நெருடிக் கொண்டு இருமுலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே
அங்கமலப் போதகத்தில் அணிகொள் முத்தம் சிந்தினாற் போல் செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம்முற்றத்தூடே அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம அங்கமரர்க்கு அமுதளித்த அமரர் கோவே முலையுணாயே
ஓடவோடக் கிங்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பனாபன் என்றிருந்தேன் ஆடியாடி அசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை ஆடி ஓடியோடுப் போய்விடாதே உத்தமா நீ முலையுணாயே
வாரணிந்த கொங்கை ஆய்ச்சி ர மாதவா உண்ணென்ற மாற்றம் நீரணிந்த குவளைவாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் சீரணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே