Skip to the text
பெரிய திருமொழி

4-6. தாவளந்து

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

உலகனைத்தையும் தாவி அளந்தவன், பொய்கையில் புகுந்து நாகத்தின் நடுக்கம் தீர்த்தவன் என்று அவனது செயல்களை ஆழ்வார் அடுக்குகிறார். அளப்பதும் அமைதிப்படுத்துவதும் ஒரே இயல்பின் இரு வெளிப்பாடுகள். எங்கும் பரவும் அவன், ஓர் இடத்தில் குனிந்து ஒருவரைத் தேற்றவும் செய்கிறான்.

பெரிய திருமொழி 4-6 - தாவளந்து (திருநாங்கூர்‌ திருப்பதி 11 : 9. திருக்காவளம்பாடி)

1298

தாவளந்து உலக முற்றும்‌ தடமலர்ப்‌ பொய்கை புக்கு நாவளம்‌ நவின்றங்கு ஏத்த நாகத்தின்‌ நடுக்கம்‌ தீர்த்தாய்‌! மாவளம்‌ பெருகி மன்னு மறையவர்‌ வாழும்‌ நாங்கைக்‌ காவளம்பாடி மேய கண்ணனே! களைகண்‌ நீயே

1299

மண்ணிடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்‌ விண்ணவர்‌ வேண்டச்‌ சென்று வேள்வியில்‌ குறை இரந்தாய்‌ துண்ணென மாற்றார்‌ தம்மைத்‌ தொலைத்தவர்‌ நாங்கை மேய கண்ணனே! காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1300

உருத்தெழு வாலி மார்வில்‌ ஓரு கணை உருவ ஓட்டி கருத்துடைத்‌ தம்பிக்கு இன்பக்‌ கதிர்‌ முடி அரசு அளித்தாய்‌ பருத்தெழு பலவும்‌ மாவும்‌ பழம்‌ விழுந்து ஒழுகும்‌ நாங்கைக்‌ கருத்தனே! காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1301

முனை முகத்து அரக்கன்‌ மாள முடிகள்‌ பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே அரசளித்து அருளினானே! ர சுனைகளில்‌ கயல்கள்‌ பாயச்‌ சுரும்பு தேன்‌ நுகரும்‌ நாங்கைக்‌ கனை கழல்‌ காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1302

படவர உச்சி தன்‌ மேல்‌ பாய்ந்து பல்‌ நடங்கள்‌ செய்து மடவரல்‌ மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே! தடவரை தங்கு மாடத்‌ தகு புகழ்‌ நாங்கை மேய கடவுளே! காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1303

மல்லரை அட்டு மாளக்‌ கஞ்சனை மலைந்து கொன்று பல்லரசு அவிந்து வீழப்‌ பாரதப்‌ போர்‌ முடித்தாய்‌! நல்லரண்‌ காவின்‌ நீழல்‌ நறை கமழ்‌ நாங்கை மேய கல்லரண்‌ காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1304

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி மாத்தமர்‌ பாகன்‌ வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்‌! பூத்தமர்‌ சோலை ஓங்கிப்‌ புனல்‌ பரந்து ஒழுகும்‌ நாங்கைக்‌ காத்தனே! காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1305

ஏவிளம்‌ கன்னிக்காகி இமையவர்‌ கோனைச்‌ செற்று காவளம்‌ கடிதிறுத்துக்‌ கற்பகம்‌ கொண்டு போந்தாய்‌! பூவளம்‌ பொழில்கள்‌ சூழ்ந்த புரந்தரன்‌ செய்த நாங்கைக்‌ காவளம்பாடி மேய கண்ணனே! களைகண்‌ நீயே

1306

சந்தமாய்‌ சமயமாகிச்‌ சமய ஐம்பூதமாகி அந்தமாய்‌ ஆதியாகி அருமறை அவையும்‌ ஆனாய்‌! மந்தமார்‌ பொழில்கள்‌ தோறும்‌ மடமயில்‌ ஆலும்‌ நாங்கை கந்தமார்‌ காவளந்தண்பாடியாய்‌! களைகண்‌ நீயே

1307

மாவளம்‌ பெருகி மன்னு மறையவர்‌ வாழும்‌ நாங்கைக்‌ காவளம்பாடி மேய கண்ணணைக்‌ கலியன்‌ சொன்ன பாவளம்‌ பத்தும்‌ வல்லார்‌ பார்‌ மிசை அரசராகி கோவிள மன்னர்‌ தாழக்‌ குடை நிழல்‌ பொலிவர்‌ தாமே

அடிவரவு: தாவளம்‌ மண்‌ உருத்து முனை படம்‌ மல்லரை மூத்தவற்கு ஏவிளம்‌ சந்தம்‌ மாவளம்‌ கண்ணார்‌