Skip to the text
பெரிய திருமொழி

4-4. மாற்றரசர்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

பகை மன்னரின் மணிமுடியும் திறலும் ஒளியும் அழிந்ததையும், அவர் தம் காதலியரின் குழையும் இழந்ததையும், தந்தையின் காலில் இருந்த தளையும் அறுந்ததையும் ஒருங்கே சொல்லும் பதிகம். ஒருவனது பிறப்பு எத்தனை பேரின் வாழ்வை மாற்றியது என்பதை ஆழ்வார் வரிசைப்படுத்துகிறார். சிறை உடைந்த அந்த இரவின் விளைவுகள் இன்னும் விரிந்து கொண்டே செல்கின்றன.

பெரிய திருமொழி 4-4 - மாற்றரசர்‌ (திருநாங்கூர்‌ திருப்பதி 11 : 7. திருத்தெற்றியம்பலம்‌)

1278

மாற்றரசர்‌ மணிமுடியும்‌ திறலும்‌ தேசும்‌ மற்றவர்‌ தம்‌ காதலிமார்‌ குழையும்‌ தந்தை கால்‌ தளையும்‌ உடன்‌ கழல வந்து தோன்றிக்‌ கதனாகம்‌ காத்தளித்த கண்ணர்‌ கண்டீர்‌ நூற்றிதழ்‌ கொள்‌ அரவிந்தம்‌ நுழைந்த பள்ளத்து இளங்கமுகின்‌ முதுபாளை பகுவாய்‌ நண்டின்‌ சேற்றளையில்‌ வெண்முத்தம்‌ சிந்தும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1279

பொற்றொடுத்‌ தோள்‌ மடமகள்‌ தன்‌ வடிவு கொண்ட பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்றெடுத்த தாய்‌ போல மடுப்ப ஆரும்‌ பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்‌ நெல்‌ தொடுத்த மலர்‌ நீலம்‌ நிறைந்த சூழல்‌ இருஞ்சிறைய வண்டொலியும்‌ நெடூங்கணார்‌ தம்‌ சிற்றடி மேல்‌ சிலம்பொலியும்‌ மிழற்றும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1280

படல்‌ அடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்‌ பசு வெண்ணெய்‌ பதமாரப்‌ பண்ணை முற்றும்‌ அடல்‌ அடர்த்த வேற்கணார்‌ தோக்கை பற்றி அலந்தலைமை செய்துழலும்‌ ஐயன்‌ கண்டீர்‌ மடல்‌ எடுத்த நெடுந்தெங்கின்‌ பழங்கள்‌ வீழ மாங்கனிகள்‌ திரட்டூருட்டா வருநீர்ப்‌ பொன்னி திடல்‌ எடுத்து மலர்‌ சுமந்தங்கு இழியு நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1281

வாராரும்‌ முலை மடவாள்‌ பின்னைக்காகி வளை மருப்பில்‌ கடூஞ்சினத்து வன்தாளார்ந்த காரார்‌ திண்‌ விடை அடர்த்து வதுவை ஆண்ட கருமுகில்‌ போல்‌ திருநிறத்து என்‌ கண்ணர்‌ கண்டீர்‌ ஏராரும்‌ மலர்ப்‌ பொழில்கள்‌ தழுவி எங்கும்‌ எழில்‌ மதியைக்‌ கால்‌ தொடர விளங்கு சோதி சீராரும்‌ மணிமாடம்‌ திகழும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1282

கலை இலங்கும்‌ அகலல்குல்‌ கமலப்‌ பாவை கதிர்‌ முத்தவெண்ண கையாள்‌ கருங்கண்‌ ஆய்ச்சி முலை இலங்கும்‌ ஒளி மணிப்பூண்‌ வடமும்‌ தேய்ப்ப மூவாத வரை நெடூந்தோள்‌ மூர்த்தி கண்டீர்‌ மலை இலங்கு நிரைச்‌ சந்தி மாட வீதி ஆடவரை மடமொழியார்‌ முகத்து இரண்டு சிலை விலங்கி மனஞ்சிறை கொண்டிருக்கும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1283

தான்‌ போலும்‌ என்றெழுந்தான்‌ தரணியாளன்‌ அது கண்டு தரித்திருப்பான்‌ அரக்கர்‌ தங்கள்‌ கோன்‌ போலும்‌ என்றெழுந்தான்‌ குன்றம்‌ அன்ன இருபது தோளுடன்‌ துணித்த ஒருவன்‌ கண்டீர்‌ மான்‌ போலும்‌ மென்னோக்கின்‌ செய்ய வாயார்‌ மரகதம்‌ போல்‌ மடக்கிளியைக்‌ கை மேல்‌ கொண்டு தேன்‌ போலும்‌ மென்மழலை பயிற்றும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1284

பொங்கிலங்கு புரிநூலும்‌ தோலும்‌ தாழப்‌ பொல்லாத குறளுருவாய்ப்‌ பொருந்தா வாணன்‌ மங்கலம்‌ சேர்‌ மறை வேள்வி அதனுள்‌ புக்கு மண்ணகலம்‌ குறை இரந்த மைந்தன்‌ கண்டீர்‌ கொங்கலர்ந்த மலர்க்‌ குழலார்‌ கொங்கை தோய்ந்த குங்குமத்தின்‌ குழம்பளைந்த கோலம்‌ தன்னால்‌ செங்கலங்கல்‌ வெண்மணல்‌ மேல்‌ தவழும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1285

சிலம்பினிடை சிறு பரல்‌ போல்‌ பெரிய மேரு திருக்குளம்பில்‌ கணகணப்பத்‌ திருவாகாரம்‌ குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக்‌ கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான்‌ கண்டீர்‌ இலங்கிய நான்மறை அனைத்தும்‌ அங்கம்‌ ஆறும்‌ ஏழிசையும்‌ கேள்விகளும்‌ எண்திக்கு எங்கும்‌ சிலம்பிய நற்பெருஞ்செல்வம்‌ திகழும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1286

ஏழுலகும்‌ தாழ்‌ வரையும்‌ எங்கும்‌ மூடி எண்திசையும்‌ மண்டலமும்‌ மண்டி அண்டம்‌ மோழை எழுந்து ஆழி மிகும்‌ ஊழி வெள்ளம்‌ முன்னகட்டில்‌ ஒடுக்கிய எம்‌ மூர்த்தி கண்டீர்‌ ஊழிதொறும்‌ ஊழிதொறும்‌ உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை அனைத்தும்‌ தாங்கு நாவர்‌ சேழுயர்ந்த மணிமாடம்‌ திகழும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலே

1287

சீரணிந்த மணிமாடம்‌ திகழும்‌ நாங்கூர்த்‌ திருத்தெற்றியம்பலத்து என்‌ செங்கண்மாலை கூரணிந்த வேல்வலவன்‌ ஆலி நாடன்‌ கொடுமாட மங்கையர்‌ கோன்‌ குறையலாளி பாரணிந்த தொல்‌ புகழான்‌ கலியன்‌ சொன்ன பாமாலை இவை ஐந்தும்‌ ஐந்தும்‌ வல்லார்‌ சீரணிந்த உலகத்து மன்னராகிச்‌ சேண்‌ விசும்பில்‌ வானவராய்த்‌ திகழ்வர்‌ தாமே

அடிவரவு: மாற்றரசர்‌ பொற்றொடு படல்‌ வாராரும்‌ கலை தான்‌ பொங்கு சிலம்பின்‌ ஏழுலகும்‌ சீரணிந்த தூம்பு