பேரணிந்து உலகத்தவர் தொழுதேத்தும் பேரருளாளன் எம்பிரானை வாரணி முலையாள் மலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்ப சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே
4-3. பேரணிந்து
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"பேரருளாளன்" — உலகத்தவர் அனைவரும் தொழுது ஏத்தும் பெருங்கருணையாளனைப் பாடும் பதிகம். மலர்மகளும் மண்மகளும் இருபுறமும் விளங்க எழுந்தருளியிருக்கும் கோலத்தை ஆழ்வார் காட்டுகிறார். அருள் என்பது அவனுடைய செயல் மட்டுமல்ல, அவனுடைய பெயருமே ஆகிவிடுகிறது.
பெரிய திருமொழி 4-3 - பேரணிந்து (திருநாங்கூர் திருப்பதி 11 : 6. திருச்செம்பொன்செய் கோயில்)
பிறப்பொடு மூப்பு ஒன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக் கழிவும் ஆனானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே
திடவிசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழுநிலத்து உயிர்களும் மற்றும் படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அவனவன் அனைய திடமொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே
வசையறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடியிணை வணங்க அலைகடல் துயின்ற அம்மானை திசைமுகன் அனையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே உயர்மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே
தீமனத்து அரக்கர் திறல் அழித்தவனே! என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்திரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே
மல்லைமா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை கல்லின் மீது இயன்ற கடிமதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை ர் செல்வ நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே அல்லிமா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே
வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக் கருமுகில் திருநிறத்தவனை செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நன்னடூவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே அஞ்சனக் குன்றம் நின்றதொப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேத நல்விளக்கை தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே
களங்கனி வண்ணா! கண்ணணே! என்தன் கார்முகிலே! என நினைந்திட்டூு உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே வளங்கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே
தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள் மான வெண்குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே
அடிவரவு: பேரணிந்து பிறப்பு திட வசை தீமனத்து மல்லை வெஞ்சினம் அன்றிய களங்கனி தேனமர் மாற்றரசர்