Skip to the text
பெரிய திருமொழி

3-10. திருமடந்தை

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

திருமகளும் மண்மகளும் இருபுறமும் திகழ, அடியவர்களின் தீவினைகள் அகல அருள் நடத்தும் இறைவனைப் பாடும் பதிகம். தனியாக அல்ல, தேவியரோடு எழுந்தருளியிருக்கும் கோலமே இங்கே முன்னிறுத்தப்படுகிறது. மூன்றாம் பத்து இக்கருணைக் காட்சியுடன் நிறைவடைகிறது.

பெரிய திருமொழி 3-10 - திருமடந்தை (திருநாங்கூர்‌ திருப்பதி 11 : 3. திரு அரிமேய விண்ணகரம்‌)

1238

திருமடந்தை மண்மடந்தை இருபாலும்‌ திகழத்‌ தீவினைகள்‌ போய்‌ அகல அடியவர்கட்கு என்றும்‌ அருள்‌ நடந்து இவ்வேழுலகத்தவர்‌ பணிய வானோர்‌ அமர்ந்து ஏத்த இருந்த இடம்‌ பெரும்‌ புகழ்‌ வேதியர்‌ வாழ்‌ தரும்‌ இடங்கள்‌ மலர்கள்‌ மிகு கைதைகள்‌ செங்கழுநீர்‌ தாமரைகள்‌ தடங்கள்‌ தொறும்‌ இடங்கள்‌ தொறும்‌ திகழ அருவிடங்கள்‌ பொழில்‌ தழுவி எழில்‌ திகழும்‌ நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1239

வென்றி மிகு நரகன்‌ உரம்‌ அது அழிய விசிறும்‌ விறல்‌ ஆழித்‌ தடக்கையன்‌ விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரைகடலைக்‌ கடைந்து அமுதம்‌ அளிக்கும்‌ குருமணி என்னாரமுதம்‌ குலவி உறை கோயில்‌ என்றும்‌ மிகு பெருஞ்செல்வத்து எழில்‌ விளங்கு மறையோர்‌ ஏழிசையும்‌ கேள்விகளும்‌ இயன்ற பெருங்‌ குணத்தோர்‌ அன்று உலகம்‌ படைத்தவனை அனையவர்கள்‌ நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே! 2.

1240

உம்பரும்‌ இவ்வேழுலகும்‌ ஏழ்கடலும்‌ எல்லாம்‌ உண்ட பிரான்‌ அண்டர்கள்‌ முன்‌ கண்டு மகிழ்வெய்த கும்ப மிகு மத யானை மருப்பொசித்துக்‌ கஞ்சன்‌ குஞ்சி பிடித்து அடித்த பிரான்‌ கோயில்‌ மருங்கெங்கும்‌ பைம்பொனொடு வெண்முத்தம்‌ பல புன்னை காட்டப்‌ பலங்கனிகள்‌ தேன்‌ காட்ட படவரவேர்‌ அல்குல்‌ அம்பனைய கண்‌ மடவார்‌ மகிழ்வெய்து நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1241

ஓடாத வாள்‌ அரியின்‌ உருவமது கொண்டு அன்று உலப்பில்‌ மிகு பெருவரத்த இரணியனைப்‌ பற்றி வாடாத வள்ளுகிரால்‌ பிளந்து அவன்‌ தன்‌ மகனுக்கு அருள்‌ செய்தான்‌ வாழும்‌ இடம்‌ மல்லிகை செங்கழுநீர்‌ சேடேறு மலர்‌ செருந்தி செழுங்கமுகம்‌ பாளை செண்பகங்கள்‌ மணம்‌ நாறும்‌ வண்பொழிலின்‌ ஊடே ஆடேறு வயலாலைப்‌ புகை கமழும்‌ நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1242

கண்டவர்‌ தம்‌ மனம்‌ மகிழ மாவலி தன்‌ வேள்விக்‌ களவின்‌ மிகு சிறு குறளாய்‌ மூவடி என்று இரந்திட்டு அண்டமும்‌ இவ்வலைகடலும்‌ அவனிகளும்‌ எல்லாம்‌ அளந்த பிரான்‌ அமரும்‌ இடம்‌ வளங்கொள்‌ பொழில்‌ அயலே அண்டமுறு முழவொலியும்‌ வண்டினங்கள்‌ ஒலியும்‌ அருமறையின்‌ ஒலியும்‌ மடவார்‌ சிலம்பின்‌ ஒலியும்‌ அண்டமுறும்‌ அலைகடலின்‌ ஒலி திகழும்‌ நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1243

வாள்‌ நெடூங்கண்‌ மலர்க்‌ கூந்தல்‌ மைதிலிக்கா இலங்கை மன்னன்‌ முடி ஒருபதும்‌ தோள்‌ இருபதும்‌ போய்‌ உதிர தாள்‌ நெடூுந்திண்‌ சிலை வளைத்த தயரதன்‌ கேய்‌ என்தன்‌ தனிச்சரண்‌ வானவர்க்கு அரசு கருதும்‌ இடம்‌ தடமார்‌ சேணிடங்கொள்‌ மலர்க்‌ கமலம்‌ சேல்கயல்கள்‌ வாளை செந்நெலொடு மடுத்தரிய உதிர்ந்த செழுமுத்தம்‌ வாள்‌ நெடுங்கண்‌ கடைசியர்கள்‌ வாருமணி நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1244

தீமனத்தான்‌ கஞ்சனது வஞ்சனையில்‌ திரியும்‌ தேனுகனும்‌ பூதனை தன்‌ ஆருயிரும்‌ செகுத்தான்‌ காமனைத்‌ தான்‌ பயந்த கருமேனியுடை அம்மான்‌ கருதும்‌ இடம்‌ பொருது புனல்‌ துறை துறை முத்து உந்தி நாமனத்தால்‌ மந்திரங்கள்‌ நால்வேதம்‌ ஐந்து வேள்வியோடு ஆறங்கம்‌ நவின்று கலை பயின்று அங்கு ஆமனத்து மறையவர்கள்‌ பயிலு மணி நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1245

கன்றதனால்‌ விளவெறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர்‌ முகில்‌ வண்ணன்‌ காலிகள்‌ முன்‌ காப்பான்‌ குன்றதனால்‌ மழை தடூத்துக்‌ குடமாடூ கூத்தன்‌ குலவும்‌ இடம்‌ கொடி மதிள்கள்‌ மாளிகை கோபுரங்கள்‌ துன்று மணி மண்டபங்கள்‌ சாலைகள்‌ தூமறையோர்‌ தொக்கு ஈண்டித்‌ தொழுதியொடு மிகப்‌ பயிலும்‌ சோலை அன்று அலர்வாய்‌ மது உண்டு அங்கு அளிமுரலும்‌ நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1246

வஞ்சனையால்‌ வந்தவள்‌ தன்‌ உயிர்‌ உண்டு வாய்த்த தயிர்‌ உண்டு வெண்ணெய்‌ அழுது உண்டு வலி மிக்க கஞ்சன்‌ உயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை கருதும்‌ இடம்‌ காவிரி சந்து அகில்‌ கனகம்‌ உந்தி மஞ்சுலவு பொழிலூடும்‌ வயலூடும்‌ வந்து வளம்‌ கொடுப்ப மாமறையோர்‌ மாமலர்கள்‌ தூவி அஞ்சலித்து அங்கு அரி சரண்‌ என்று இறைஞ்சு மணி நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ வணங்கு மட நெஞ்சே!

1247

சென்று சினவிடை ஏழும்‌ பட அடர்த்துப்‌ பின்னை செவ்வித்‌ தோள்‌ புணர்ந்து உகந்த திருமால்‌ தன்‌ கோயில்‌ அன்று அயனும்‌ அரன்‌ சேயும்‌ அனையவர்கள்‌ நாங்கூர்‌ அரிமேய விண்ணகரம்‌ அமர்ந்த செழுங்குன்றை கன்றி நெடுவேல்‌ வலவன்‌ மங்கையர்‌ தம்‌ கோமான்‌ கலிகன்றி ஒலிமாலை ஐந்தினொடு மூன்றும்‌ ஒன்றினொடும்‌ ஒன்றும்‌ இவை கற்று வல்லார்‌ உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய்‌ உம்பரும்‌ ஆவர்களே

அடிவரவு: திருமடந்தை வென்றி உம்பர்‌ ஓடாத கண்டவர்‌ வாள்‌ தீமனத்தான்‌ கன்று வஞ்சனையால்‌ சென்று போது