சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி சண்பகங்கள் மண நாறும் வண்பொழிலின் ஊடே வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
3-9. சலங்கொண்ட
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
இரணியனின் மார்பைக் கீண்டவனும், கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்தவனுமான காளையைப் பாடும் பதிகம். அழிப்பதும் அளிப்பதும் ஒரே கையால் நிகழ்வதை ஆழ்வார் அடுத்தடுத்து வைத்துக் காட்டுகிறார். இரண்டும் ஒரே நோக்கத்தின் இரு வடிவங்கள் — காக்க வேண்டும் என்பதே அது.
பெரிய திருமொழி 3-9 - சலங்கொண்ட (திருநாங்கூர் திருப்பதி 11 - 2. திருவைகுந்த விண்ணகரம்)
திண்ணியதோர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் எண்ணில் மிகு பெருஞ்செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழிசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
அண்டமும் இவ்வலைகடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்டமது நிறைத்து அவன்கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் எண்திசையும் பெருஞ்செந்நெல் இளந்தெங்கு கதலி இலைக்கொடு ஒண்குலைக் கமுகொடு இசலி வளம் சொரிய வண்டு பல இசை பாட மயிலாலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடி தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் சிலை இலங்கு மணிமாடத்து உச்சி மிசைச் சூலம் செழுங்கொண்டல் அகடிரியச் சொரிந்த செழுழுத்தம் மலை இலங்கு மாளிகை மேல் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடு செய்த தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு திண்மை மிகு மருதொடு நற்சகடம் இறுத்து அருளும் தேவன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் உண்மை மிகு மறையொடு நற்கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவில்லா பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அழுது செய்து இவ்வுலகுண்ட காளை உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில் இளம்படி நற்கமுகு குலைத்தெங்கு கொடுச் செந்நெல் ஈன்கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளரு மணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்து அருளும் திருவுடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப மாறாத பெருஞ்செல்வம் வளரு மணி நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
வங்கமலி தடங்கடலுள் வானவர்களோடு மாமுனிவர் பலர் கூடி மாமலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே! எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் ர் செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச் சேலுகளும் செழும்பணை சூழ் வீதி தொறும் மிடைந்து மங்குல் மதி அகடூரிஞ்சு மணிமாட நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே!
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக்கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் வங்கமலி கடல் உலகில் மலிவெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் ர மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்கமலி தமிழ் மாலை பத்திவை வல்லார்கள் தரணியொடு விசும்பாளும் தன்மை பெறுவாரே
அடிவரவு: சலம் திண்ணியது அண்டமும் கலை மின் பெண்மை விளங்கனியை ஆறாத வங்கம் சங்கு திருமடந்தை