ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாளகிற்பீர்! கானாட மஞ்ஞைக் கணமாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய் தேனாட மாடக் கொடுயாடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
3-2. ஊன் வாட
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
உடல் வாட உண்ணாமல், புலன்களை வருத்தி, தவம் செய்து உழல்பவர்களை ஆழ்வார் நோக்கிப் பேசும் பதிகம். அத்தனை வருத்தத்திற்குப் பின்பும் கிடைக்காதது, அவன் திருநாமத்தால் எளிதில் கிடைக்கும் என்கிறார். கடினமான வழியைத் தேர்ந்தெடுப்பவர்களிடம் ஓர் எளிய வழியைக் காட்டுவதே இதன் நோக்கம்.
பெரிய திருமொழி 3-2 - ஊன் வாட (திருச்சித்திரகூடம் 1)
காயோடு நீடு கனி உண்டு வீசு க௫ங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர்! வாயோது வேதம் மல்கின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க ஓங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
வெம்பும் சினத்துப் புனக்கேழல் ஒன்றாய் விரிநீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த வம்புண் பொழில் சூழ் உலகு அன்றெடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்! பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
அருமாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெருவேள்வியில் சென்று இரந்த பெருமான் திருநாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்! கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவைநா அரவின் அணைப் பள்ளியின் மேல் திருமால் திருமங்கையோடாடு?' தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
கோமங்க வங்கக் கடல் வையம் உய்யக் குலமன்னர் அங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்ககிற்பீர்! பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் சேமங்கொள் பைம்பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
நெய்வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணியார்ந்து இலங்கு மையார் மணிவண்ணனை எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்! அவ்வாய் இளமங்கையர் பேசவும் தான் அருமாமறை அந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
மெளவல் குழல் ஆய்ச்சி மெந்தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த தெய்வத் திருமாமலர் மங்கை தங்கு திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர்! கெளவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலங்கொள் தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
மாவாயின் அங்கம் மதியாது கீறி மழைமா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரைமா கழல் கூடும் குறிப்புடையீர்! மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் அருநீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்! பெருநீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள திருநீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே
சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச்சித்ர கூடத்து உறை செங்கண் மாலுக்கு ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலைநீர் உலகுக்கு அருளே புரியும் காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா ஒலிமாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பலகாலம் நிற்கும்படி வாழ்வர் தாமே
அடிவரவு: ஊன் காயோடு வெம்பும் அருமா கோமங்க நெய் மெளவல் மாவாயின் செரு சீரார் வாட