Skip to the text
பெரிய திருமொழி

3-1. இருந்தண் மாநிலம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

ஏனமாய்ப் பெரிய நிலத்தை வளைந்த கொம்பினுள் ஒடுக்கி எடுத்தவனும், கரிய கடலில் கண்துயின்றவனும் ஒருவரே என்று ஆழ்வார் இணைத்துக் காட்டும் பதிகம். செயலின் ஆரவாரமும் துயிலின் அமைதியும் ஒரே இயல்பின் இரு பக்கங்கள். மூன்றாம் பத்து இந்த அமைதியான வலிமையின் காட்சியுடன் தொடங்குகிறது.

பெரிய திருமொழி 3-1 - இருந்தண்‌ மாநிலம்‌ (திருவயிந்திரபுரம்‌)

1148

இருந்தண்‌ மாநிலம்‌ ஏனமதாய்‌ வளை மருப்பினில்‌ அகத்து ஒடுக்கி கருந்தண்‌ மாகடல்‌ கண்‌ துயின்றவனிடம்‌ கமல நன்மலர்த்‌ தேறல்‌ அருந்தி ்‌ இன்னிசை முரன்றெழும்‌ அளிகுலம்‌ பொதுளி அம்‌ பொழில்‌ - ஊடே செருந்தி நாண்மலர்‌ சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே

1149

மின்னும்‌ ஆழி அங்கை அவன்‌ செய்யவள்‌ உறை தரு திருமார்பன்‌ பன்னு நான்மறைப்‌ பல்பொருள்‌ ஆகிய பரனிடம்‌ வரைச்‌ சாரல்‌ பின்னும்‌ மாதவிப்‌ பந்தலில்‌ பெடை வரப்‌ பிணி அவிழ்‌ கமலத்து தென்னவென்று வண்டு இன்னிசை முரல்தரு திருவயிந்திரபுரமே

1150

வையம்‌ ஏழும்‌ உண்டு ஆலிலை வைகிய மாயவன்‌ அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகனிடம்‌ மெய்தகு வரைச்‌ சாரல்‌ மொய்கொள்‌ மாதவி செண்பகம்‌ முயங்கிய முல்லையங்‌ கொடு ஆட செய்ய தாமரைச்‌ செழும்பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே

1151

மாறு கொண்டு உடன்றெதிர்ந்த வல்லவுணன்‌ தன்‌ மார்பகம்‌ இருபிளவா கூறு கொண்டு அவன்‌ குல மகற்கு இன்னருள்‌ கொடுத்தவனிடம்‌ - மிடைந்து சாறு கொண்ட மென்கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்‌ சேறு கொண்ட தண்‌ பழனமது எழில்‌ திகழ்‌ திருவயிந்திரபுரமே

1152

ஆங்கு மாவலி வேள்வியில்‌ இரந்து சென்று அகலிடம்‌ அளந்து ஆயர்‌ பூங்கொடிக்கு இன விடை பொருதவனிடம்‌ பொன்மலர்‌ திகழ்‌ வேங்கை கோங்கு செண்பகக்‌ கொம்பினில்‌ குதிகொடு குரக்கினம்‌ இரைத்தோடி தேன்‌ கலந்த தண்‌ பலங்கனி நுகர்தரு திருவயிந்திரபுரமே

1153

கூனுலாவிய மடந்தை தன்‌ கொடுஞ்சொலின்‌ திறத்து இளங்கொடியோடும்‌ கானுலாவிய கருமுகில்‌ திருநிறத்தவனிடம்‌ கவினாரும்‌ வானுலாவிய மதி தவழ்‌ மால்வரை மாமதிள்‌ புடை சூழ தேனுலாவிய செழும்‌ பொழில்‌ தழுவிய திருவயிந்திரபுரமே

1154

மின்னின்‌ நுண்ணிடை மடக்கொடி காரணம்‌ விலங்கலின்‌ மிசை இலங்கை மன்னன்‌ நீள்முடி பொடி செய்த மைந்தனதிடம்‌ மணி வரை நீழல்‌ அன்ன மாமலர்‌ அரவிந்தத்து அமளியில்‌ பெடையொடும்‌ இனிது அமர செந்நெலார்‌ கவரிக்‌ குலை வீசு தண்‌ திருவயிந்திரபுரமே

1155

விரை கமழ்ந்த மென்கருங்குழல்‌ காரணம்‌ வில்லிறுத்து அடல்‌ மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்‌ நிலவிய இடம்‌ தடமார்‌ வரை வளம்‌ திகழ்‌ மதகரி மருப்பொடு மலை வளரகில்‌ உந்தி திரை கொணர்ந்து அணை செழுநதி வயல்‌ புகு திருவயிந்திரபுரமே

1156

வேல்கொள்‌ கைத்தலத்து அரசர்‌ வெம்போரினில்‌ விசயனுக்காய்‌ மணித்‌ - தேர்‌ கோல்கொள்‌ கைத்தலத்து எந்தை பெம்மானிடம்‌ குலவு தண்‌ வரைச்‌ - சாரல்‌ கால்கொள்‌ கண்கொடுக்‌ கை எழக்‌ கழுகு இளம்பாளைகள்‌ கமழ்‌ சாரல்‌ சேல்கள்‌ பாய்‌ தரு செழுநதி வயல்‌ புகு திருவயிந்திரபுரமே

1157

மூவராகிய ஒருவனை மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை தேவர்‌ தானவர்‌ சென்று சென்றிறைஞ்சத்‌ தண்‌ திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல்‌ வலவன்‌ கலிகன்றி விரித்து உரைத்த பாவு தண்‌ தமிழ்‌ பத்திவை பாடிடப்‌ பாவங்கள்‌ பயிலாவே

அடிவரவு: இருந்தண்‌ மின்னும்‌ வையம்‌ மாறு ஆங்கு கூன்‌ மின்னின்‌ விரை வேல்‌ மூவர்‌ ஊன்‌