Skip to the text
பெரிய திருமொழி

2-10. மஞ்சாடு

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

ஏழு மலைகளும், ஏழு கடல்களும், வானமும் மண்ணும் — அனைத்தையும் ஒரு சிறு வயிற்றில் அடக்கிக் கொண்டவனை ஆழ்வார் வியந்து பாடுகிறார். எஞ்சாமல் எல்லாவற்றையும் கொண்ட அவ்வுடல் ஒரு குழந்தையின் உடலாக இருந்தது என்பதே இதன் வியப்பு. இரண்டாம் பத்து இந்த அளவற்ற தன்மையின் காட்சியுடன் நிறைவடைகிறது.

பெரிய திருமொழி 2-10 - மஞ்சாடு (திருக்கோவலூர்‌)

1138

மஞ்சாடு வரை ஏழும்‌ கடல்கள்‌ ஏழும்‌ வானகமும்‌ மண்ணகமும்‌ மற்றும்‌ எல்லாம்‌ எஞ்சாமல்‌ வயிற்று அடக்கி ஆலின்‌ மேல்‌ ஓர்‌ இளந்தளிரில்‌ கண்‌ வளர்ந்த ஈசன்‌ தன்னை துஞ்சா நீர்‌ வளம்‌ சுரக்கும்‌ பெண்ணைத்‌ தென்பால்‌ தூய நான்மறையாளர்‌ சோமழுச்‌ செய்ய செஞ்சாலி விளைவயலுள்‌ திகழ்ந்து தோன்றும்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1139

கொந்தலர்ந்த நறுந்துழாய்‌ சாந்தம்‌ தூபம்‌ தீபம்‌ கொண்டு அமரர்‌ தொழப்‌ பணங்கொள்‌ பாம்பில்‌ சந்தணி மென்முலை மலராள்‌ தரணி மங்கை தாம்‌ இருவர்‌ அடி வருடும்‌ தன்மையானை வந்தனை செய்து இசையேழ்‌ ஆறங்கம்‌ ஐந்து வளர்‌ வேள்வி நான்மறைகள்‌ மூன்று தீயும்‌ சிந்தனை செய்து இருபொழுதும்‌ ஒன்றும்‌ செல்வத்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1140

கொழுந்தலரும்‌ மலர்ச்‌ சோலைக்‌ குழாங்கொள்‌ பொய்கைக்‌ கோள்‌ முதலை வாள்‌ எயிற்றுக்‌ கொண்டற்கு எள்கி அழுந்திய மாகளிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம்மே வரத்‌ தோன்றி அருள்‌ செய்தானை ஈர எழுந்த மலர்க்‌ கருநீலம்‌ இருந்தில்‌ காட்ட இரும்புன்னை முத்தரும்பிச்‌ செம்பொன்‌ காட்ட செழுந்தட நீர்க்கமலம்‌ தீவிகை போல்‌ காட்டூம்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1141

தாங்கரும்போர்‌ மாலி படப்‌ பறவை ஊர்ந்து தராதலத்தோர்‌ குறை முடித்த தன்மையானை ஆங்கு அரும்பிக்‌ கண்ணீர்‌ சோர்ந்து அன்பு கூரும்‌ அடியவர்கட்கு ஆரமுதம்‌ ஆனான்‌ தன்னை கோங்கரும்புசுர புன்னை குரவார்‌ சோலைக்‌ குழாவரி வண்டு இசை பாடும்‌ பாடல்‌ கேட்டு தீங்கரும்பு கண்வளரும்‌ கழனி சூழ்ந்த திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1142

கறை வளர்‌ வேல்‌ கரன்‌ முதலாக்‌ கவந்தன்‌ வாலி கணை ஒன்றினால்‌ மடிய இலங்கை தன்னுள்‌ பிறை எயிற்று வாள்‌ அரக்கர்‌ சேனை எல்லாம்‌ பெருந்தகையோடு உடன்‌ துணித்த பெம்மான்‌ தன்னை மறை வளரப்‌ புகழ்‌ வளர மாடந்தோறும்‌ மண்டபம்‌ ஒண்தொளி அனைத்தும்‌ வாரம்‌ ஓத சிறை அணைந்த பொழில்‌ அணைந்த தென்றல்‌ வீசும்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1143

உறியார்ந்த நறுவெண்ணெய்‌ ஒளியால்‌ சென்று அங்கு உண்டானைக்‌ கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள்‌ பனி மல்கும்‌ தன்மையானை வெறியார்ந்த மலர்மகள்‌ நாமங்கையோடு வியன்‌ கலை எண்தோளினாள்‌ விளங்கு செல்வச்‌ செறியார்ந்த மணிமாடம்‌ திகழ்ந்து தோன்றும்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1144

இருங்கைம்மா கரி முனிந்து பரியைக்‌ கீறி இன விடைகள்‌ ஏழடர்த்து மருதம்‌ சாய்த்து வரும்‌ சகடம்‌ இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம்‌ செய்‌ கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை கருங்கமுகு பசும்பாளை வெண்ழுத்து ஈன்று காய்‌ எல்லாம்‌ மரகதமாய்ப்‌ பவளம்‌ காட்ட செருந்திமிக மொட்டு அலர்த்தும்‌ தேன்கொள்‌ சோலைத்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1145

பாரேறு பெரும்‌ பாரம்‌ தீரப்‌ பண்டு பாரதத்துத்‌ தூது இயங்கி பார்த்தன்‌ செல்வத்‌ தேரேறு சாரதியாய்‌ எதிர்ந்தார்‌ சேனை செருக்‌ களத்துத்‌ திறல்‌ அழியச்‌ செற்றான்‌ தன்னை போரேறு ஒன்று உடையானும்‌ அளகைக்‌ கோனும்‌ புரந்தரனும்‌ நான்முகனும்‌ பொருந்தும்‌ ஊர்‌ போல்‌ சீரேறு மறையாளர்‌ நிறைந்த செல்வத்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1146

தூவடிவின்‌ பார்மகள்‌ பூமங்கையோடு சுடர்‌ ஆழி சங்கு இருபால்‌ பொலிந்து தோன்ற காவடிவின்‌ கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்‌ புரியும்‌ கருத்தினானை சேவடி கை திருவாய்‌ கண்‌ சிவந்த ஆடை செம்பொன்‌ செய்‌ திரு உருவம்‌ ஆனான்‌ தன்னை தீவடிவின்‌ சிவன்‌ அயனே போல்வார்‌ மன்னு திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே

1147

வாரணம்‌ கொள்‌ இடர்‌ கடிந்த மாலை நீல மரதகத்தை மழை முகிலே போல்வான்‌ தன்னை சீரணங்கு மறையாளர்‌ நிறைந்த செல்வத்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ என்று வாரணங்கு முலை மடவார்‌ மங்கை வேந்தன்‌ வாள்‌ கலியன்‌ ஒலி ஐந்தும்‌ ஐந்தும்‌ வல்லார்‌ காரணங்களால்‌ உலகம்‌ கலந்து அங்கு ஏத்தக்‌ கரந்து எங்கும்‌ பரந்தானைக்‌ காண்பர்‌ தாமே

அடிவரவு: மஞ்சாடு கொந்து கொழுந்து தாங்கு கறை உறி இருங்கை பார்‌ தூவடிவின்‌ வாரணம்‌ இருந்தண்‌